> குருத்து: டாலர் யானை! புகுந்தாலும் நட்டம்! வெளியேறினாலும் நட்டம்!

November 18, 2008

டாலர் யானை! புகுந்தாலும் நட்டம்! வெளியேறினாலும் நட்டம்!



ஒரு நாடு கடும் பொருளாதார சுனாமியில் சிக்கி, திவலாகிவிட்டது. ஆனால், மூன்றே மாதங்களில் உலக நாடுகளில் அதன் நாணய மதிப்பு உயருகிறது. இது உலக அதிசயம் அல்லவா!

இந்த அதிசயம் உலகத்தில் வேறு எந்த நாட்டிற்கும் நடக்க வாய்ப்பேயில்லை. அமெரிக்காவிற்கு மட்டுமே அந்த வாய்ப்பு. டாலரில் இருக்கிறது அதன் சூட்சுமம்.

இதே பொருளாதார நிலைமையில் இந்தியா சிக்கியிருந்தால், இந்தியா இன்னொரு சோமாலியா-வாக சில ஆண்டுகளில் உருமாறியிருக்கும்.

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற கொள்கைகளை கைவிடாத வரை இந்தியாவிற்கு அந்த நாள் வெகு தூரமில்லை.

****

‘லைட்லிங்க்’ என்ற பதிவர் டாலரில் உள்ள சூட்சுமத்தை அருமையாக பதிவு செய்திருக்கிறார். படியுங்கள்.

\\எப்பொழுதெல்லாம், அமெரிக்கா மட்டும் தனியாக நெருக்கடியில் சிக்கியிருக்கிறதோ, அப்பொழுதெல்லாம், டாலர் மதிப்பு வீழ்ச்சியடையும். ஆனால், அது உலக நாடுகளின் பொது நெருக்கடியாக விரைவில் மாற்றப்படும்.//

//உலக அந்நியச் செலாவணியில் மிகப்பெரும் பங்கு டாலர்களிலேயே சேமிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் கூட டாலரின் சரிவை விரும்புவதில்லை.//

***

உயர்கின்ற டாலர் உணர்த்துகின்ற பாடம்

கடந்த ஆறு வருடங்களாக, உலக நாடுகளின் சில முக்கியமான நாணயங்களுக்குக்கெதிராக டாலர் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது. இந்தக் காலத்தில் பின்னடவை சந்தித்த அமெரிக்கப் பொருளாதாரம், கடந்த ஓராண்டுக்காலமாக மேலும் கடுமையான நெருக்கடிக்குள்ளானது.

டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்புயர்வு சர்வதேசச் சந்தையில் இந்தியாவின் ஏற்றுமதியை பெருமளவு பாதித்தது. ரூபாயின் மதிப்பு உயர்ந்ததால், இந்திய ஏற்றுமதிப் பொருட்களின் விலை உயர்ந்ததே அதற்கு காரணம். தமிழ்நாட்டில் திருப்பூர் பின்னலாடைகள், கோவையின் என்ஜீனியரிங் பொருட்கள் உட்பட ஏற்றுமதி நெருக்கடிக்குள்ளானதும் அண்மைக்கால அனுபவம்.

இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு டாலர் ரூ. 35 என்ற அளவில் மேலும் வீழ்ச்சியடையும் என்றெல்லாம் சென்ற ஆண்டு கணிக்கப்பட்டது. ஆனால், இன்று நேர்மாறாக, டாலர் மதிப்பு ரூ. 50-ஐத் தொட்டு உயர்ந்து நிற்பதை பார்க்கிறோம். ஜப்பானின் யென்னைத் தவிர்த்து, மற்ற உலகின் அனைத்து முக்கிய கரன்சிக்களுக்கெதிராகவும் டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. அதுவும் அமெரிக்காவின் நிதிச்சந்தை நெருக்கடி கடுமையாகவுள்ள காலத்தில் இது நிகழ்ந்து வருகிறது.

ஒருநாடு கடுமையான நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும்போது, அந்த நாட்டு நாணயத்தின் மதிப்பு எவ்வாறு உயர முடியும் என்று எழும் இயல்பான கேள்விக்கான காரணங்களை தேடுவதும், பாடங்களை கற்றுக் கொள்வதுமே இக்கட்டுரையின் நோக்கம். முதலில், டாலர் மதிப்பு ஏன் வீழ்ச்சியடைந்தது என பார்ப்போம்.

அடுத்தவன் தலையில் மிளகாய் அரைத்தே...

அமெரிக்கா நீண்ட காலமாகவே, பிற நாடுகளிடம் கடன் வாங்கி தனது சொந்த நாட்டு செலவுகளை சமாளிக்கும் நடைமுறையைக் கொண்ட ஒரு நாடு. அதனுடைய வெளிநாட்டுக் கடன் 9.4 டிரில்லியன் (9.4 இலட்சம் கோடி டாலர்) என்பது அரசாங்கக் கணக்கு. இது 12 டிரில்லியன் டாலர் வ்ரை இருக்குமென “ஐரோப்பிய யூனியன் டைஜஸ்ட்” தெரிவிக்கிறது. மேலும், தனது உள்நாட்டு, வெளிநாட்டு பற்றாக்குறைகளையும், வெளிநாட்டு முதலீடுகளையும் சமாளிப்பதற்காக, வேலை நாள் ஒன்றுக்கு 4 பில்லியன் (400 கோடி) டாலர் வீதம் ஆண்டு முழுவதும் கடன் வாங்க வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு இருப்பதாகவும் அது தெரிவிக்கிறது. அமெரிக்காவின் கடன்களில், ஏறக்குறைய 75 சதவிகிதம் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிடமிருந்து பெறப்பட்டதே என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், அதனுடைய நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஏறக்குறைய 800 பில்லியன் டாலர் அளவை நெருங்கியிருக்கிறது. இது அமெரிக்கா உள்நாட்டு மதிப்பில் 7 சதவிகிதம் ஆகும். இது தவிர, 2007-ல் வெடித்த சப்-பிரைம் நெருக்கடி, பணவீக்கம் என பல பிரச்சனைகள். இயல்பாக இவையெல்லாம் டாலரின் மதிப்பினை வீழ்ச்சியடையச் செய்தன. அமெரிக்க நாட்டில் பொருளாதார நெருக்கடி. எனவே, அதன் நாணயம் மதிப்பிழக்கிறது. இதுவரை, சூழ்நிலையை எளிதில் புரிந்து கொள்ள முடியும். ஆனால், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு முதல், டாலர் மதிப்பு உயரத் தொடங்கியிருக்கிறது. இது எப்படி என்ற நமது கேள்வியும் இங்கிருந்து தான் தொட்ங்குகிறது.

சாதகங்களும், சாகசங்களும்

எப்பொழுதெல்லாம், அமெரிக்கா மட்டும் தனியாக நெருக்கடியில் சிக்கியிருக்கிறதோ, அப்பொழுதெல்லாம், டாலர் மதிப்பு வீழ்ச்சியடையும். ஆனால், அது உலக நாடுகளின் பொது நெருக்கடியாக விரைவில் மாற்றப்படும். (தனது நெருக்கடியை உலக நெருக்கடியாக மாற்றுவதில் அமெரிக்க் ஏகாதிப்பத்தியதிற்கு உள்ள சாதகங்களையும், அதன் கடந்த கால சாகசங்களையும் நினைவில் நிறுத்திக்கொண்டால், புரிதல் எளிதாகும்) அடுத்த கட்டத்தில் அமெரிக்காவின் கை ஓங்கும். அத்துடன், டாலரின் மதிப்பும் மீண்டும் உயரும். இது இன்றைய உலக பொருளாதாரத்தின் எழுதப்படாத விதி. இதற்கு அடிப்படையான காரணம் 1973ல் டாலருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்குப் பின்னர், சட்டரீதியாக இல்லாவிட்டாலும், நடைமுறையில் அது உலக பரிவர்த்தனை நாணயமாக தொடர்ந்து ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதே காரணம். அதன் அரசியல், இராணுவப் பின்னணி என்பதெல்லாம் தனிக்கதை.



1999ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் பொது நாணயமாக யூரோ அறிமுகமானபொழுது, டாலருக்கு போட்டியாக அது உருவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. நாணயம் என்ற வகையில் பொருளாதார ரீதியாக அது வலிமை பெற்றாலும், இன்றுவரை அரசியல் ரீதியாக டாலரின் இடத்தை யூரோவால் அடைய முடியவில்லை. எண்ணெய் ஏற்றுமதியில் யூரோவிற்கு மாறுவது என்ற சதாம் ஹீசேனின் முடிவு ஈராக் போருக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா? இன்றைக்கும் கூட ஈரான், வெனிசுலா போன்ற நாடுகள் தவிர உலக எண்ணெய் வர்த்தகத்தில், வேறு எந்த நாடும் யூரோவை பரிவர்த்தனை நாணயமாக ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.

உலக அந்நியச் செலாவணியில் மிகப்பெரும் பங்கு டாலர்களிலேயே சேமிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக அமெரிக்காவை எதிர்ப்பவர்கள் கூட டாலரின் சரிவை விரும்புவதில்லை. சீனாவின் 2 டிரில்லியன் (2 லட்சம் கோடி) டாலர் அந்நியச் செலாவணியின் ஆகப்பெரும் பங்கு டாலர்களிலேயே சேமிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 300 பில்லியன் (30,000 கோடி) டாலர் சேமிப்பும் இத்தகையதே. அரபு நாடுகளின் பெட்ரோ டாலர்கள், லண்டன், பாரீஸ், ஜீரிச் (சுவிட்சர்லாந்து) மையங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் யூரோ டாலர்கள் (யூரோ நாணயம் அல்ல) அனைத்துமே இவ்வகைப்பட்டவையே.

உலக எண்ணெய் வர்த்தகத்தில் டாலரே இன்றும் ஆதிக்கம் செலுத்துகிறது. தவிர, உலக உற்பத்தியில், அமெரிக்காவின் பங்கு 25 சதவீதம். ஏற்றுமதியை சார்ந்தே நிற்கும் நாடுகள் பல பொருளாதார ரீதியாக அமெரிக்கச் சந்தையை நம்பியிருக்கும் நிலை தொடர்கிறது.

டாலர் யானை

உலகமயமாக்கல் என்ற பெயரால், உலக நாடுகளின் பொருளாதாரங்கள் ஒன்றிணைக்கப்பட்டிருப்பதால், அமெரிக்க நிதிச்சந்தை நெருக்கடி மிக விரைவில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் நெருக்கடியாக மாற்றப்பட்டது. அமெரிக்காவின் நிதிச்சந்தை நெருக்கடியை தொடர்ந்து, இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து டாலர்கள் வெளியேறின. ஓரிரு வாரங்களுக்குள்ளேயே 13 பில்லியன் (1300 கோடி) டாலர்களை அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றிவிட்டனர். இதனால் ஒரு பக்கம் பங்குச் சந்தை வீழ்ந்தது. மறுபக்கம் டாலருக்கு ஏற்பட்ட கிராக்கியால், டாலர் மதிப்பு உயரத் தொடங்கியது. தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது.



இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதெல்லாம் பதறாத நிதியமைச்சர் சிதம்பரம், பங்குச் சந்தை சிதறிய பொழுது பதறிப்போனார். பங்குச் சந்தை முதலீடுகளுக்கு நிதி தாராளமாக கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் வரை வங்கிகளின் கையிருப்பை பெருக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இங்கு சற்று பின்னோக்கி பாருங்கள். இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னால், பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், வங்கிகளிலிருந்து இருப்பைக் குறைத்ததும் இவர்கள் தானே? அப்படியானால் பணவீக்கம் தீர்ந்துவிட்டதா?

அந்நிய மூலதனம் அதிகமாய் நுழைந்ததால் பணப்புழக்கம் அதிகரித்தது. அது பணவீக்கத்திற்கு இட்டுச் சென்றது. விலைவாசி எகிறியது. அதற்காக வங்கிகளின் கையிருப்பை குறைத்தார்கள். இப்பொழுது, அதே மூலதனம் வெளியேறும் பொழுது பணவீக்க நிலைமைகளில் மாற்றம் ஏதுமில்லாத போதும் கூட எதிர்த் திசையில் வேறு ஒரு நடவடிக்கை.
ஒன்று மட்டும் நன்றாகப் புரிகிறது. டாலர் யானை புகுந்தாலும் நஷ்டம். வெளியேறினாலும் நஷ்டம்.

உண்மைப் பொருளாதாரத்தை அதாவது பொருளுற்பத்தியை நம்பாமல், நிதி மூலதனத்தை மட்டும் பயன்படுத்தி ஊக நடவடிக்கைகள் மூலமே எந்த நாடும் முன்னேறியதாக வரலாறு இல்லை. நெருக்கடியிலும் தனது டாலர் மதிப்பினை உயர்த்திக் கொள்ளும் சாதகமும், சாமர்த்தியமும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமே உண்டு. உலகின் முதல் பெருங்கடனாளியான அமெரிக்கா, அதே வேளையில் நிகர மூலதன ஏற்றுமதியிலும் உலகில் முதலிடத்தை வகிக்கிறது. ஏகாதிபத்திய புலியைப் பார்த்து இந்தியப் பூனை கற்றுக்கொள்வதற்கு பாடங்களே இல்லையா?

உண்மை பொருளாதாரம் குறித்த அக்கறையை விட ஊகப் பொருளாதாரத்தின் மீது அரசு அதிக அக்கறை காட்டுகிறது. அதற்காக மாய்ந்து மாய்ந்து எடுக்கும் நடவடிக்கைகளிலும், காட்டும் அக்கறையிலும் அரை மடங்காவது பொருளுற்பத்திகாகவும், சமூக பாதுகாப்பிற்காகவும் காட்டினால், அதுவே உண்மையான சீர்திருத்தமாக இருக்கும். நாய் வாலை ஆட்டலாம். வால் நாயை ஆட்டலாமா?

(அனுமதியுடன்)

நன்றி - From : lightlink.wordpress.com

0 பின்னூட்டங்கள்: