> குருத்து: தொழிலாளர்களை அலைக்கழிக்கிறது தொழிலாளர் நல அரசு காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ.)

December 9, 2008

தொழிலாளர்களை அலைக்கழிக்கிறது தொழிலாளர் நல அரசு காப்பீட்டுக் கழகம் (இ.எஸ்.ஐ.)




இ.எஸ்.ஐ. மருத்துவ பயன் பெறுவதற்கு... தொழிலாளர்களுக்கு தரும் அடையாள அட்டைகளை தராமலே அருமையான சேவை தருகிறது”.


- அதெப்படி சாத்தியம் என்கிறார்களா? மேலே படியுங்கள். புரியும்.

***

தொழிலாளர்களின் மருத்துவ நலன்களுக்காக அரசு, தொழிலாளர் நல அரசு காப்பீட்டுக் கழகம் (E.S.I.C) என்றொரு கார்ப்பரேசனை உருவாக்கி, பல வருடங்களாக இயக்கிவருகிறது.

ரூ. 10000க்கு கீழ் வருமானம் பெறும் எல்லா தொழிலாளர்களும் இந்த திட்டத்தின் கீழ் பலன் பெறுவார்கள். தொழிலாளி தான் வாங்கும் சம்பளத்திலிருந்து 1.75% பணத்தை செலுத்த வேண்டும். முதலாளி 4.75% பணம் சேர்த்து கட்டவேண்டும். இது விதி. தொழிலாளி மற்றும் அவரைச் சார்ந்துள்ள குடும்பத்தினர் அனைவரும் இதில் பலன் பெறலாம் (சில நிபந்தனைகளுடன்).

“இந்தியாவிலேயே இந்த திட்டம் தான் குறைந்த பணம் செலுத்தி, பலன்கள் அதிகம் பெறும் திட்டம்” – என இ.எஸ்.ஐ. பெருமையுடன் கூறுகிறது. உண்மை தான்.

ஆனால், இந்த பலன் பெற அடிப்படையானது இ.எஸ்.ஐ. தரும் அடையாள அட்டை. அந்த அட்டையே தராமல் இழுத்தடித்தால் எப்படி பலன் பெறுவது?

****

இ.எஸ்.ஐ. விதிகள் சொல்வது என்னவென்றால்?

ஒரு தொழிலாளி ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தவுடன் ஒரு விண்ணப்பத்தை (Form – 1) பூர்த்தி செய்து, தொழிலாளியின் போட்டா ஒட்டி 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த உடன், 3 மாதங்களுக்கு மட்டும் மருத்துவம் பார்ப்பதற்கு புகைப்படத்துடன் கூடிய ஒரு தற்காலிக அடையாள அட்டை (Temporary Identity card) தருவார்கள்.

பிறகு, இரண்டு மாதங்கள் கழித்து, அந்த தற்காலிக அட்டையுடன் குடும்ப புகைப்படத்தை இணைத்துக் கொடுத்தால், நிரந்தர அட்டை (Permanent Identity card) தருவார்கள்.

இப்பொழுது நடப்பது என்னவென்றால்?

தற்காலிக அட்டை வாங்கும் படலம்

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால், 10 நாட்கள் கழித்து வாருங்கள் என்பார்கள். அங்குள்ள எழுத்தர் வேலை செய்ய சோம்பல்பட்டு இப்படிச் சொல்கிறார் என அலுவலக பொறுப்பாளரான மேனேஜரிடம் போய் விரைவில் வேண்டும் என சொன்னால்... அவர் 15 நாட்கள் கழித்து வாருங்கள் என்பார்.

15 நாட்கள் கழித்து போய் பார்த்தால், மீண்டும் 10 நாட்கள் கழித்து வாருங்கள் என்பார்கள். திரும்பவும் போய் கேட்டால், நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் கட்டு கட்டாய் இருக்கும்.

அதில் நம்மையே தேடித்தர சொல்வார்கள். நாம் 15 நிமிடம் பொறுமையாய் தேடி அவர்களிடம் கொடுத்தால்... நமக்கு முன்பே இரண்டு நிமிடத்தில் எண்ணை போட்டு தருவார்கள். (இந்த இரண்டு நிமிட வேலைக்காகவா நாம் மூன்று நாள் அலைந்தோம்! என்றெல்லாம் நீங்கள் சிந்தித்தால், உங்களுக்கு ரத்தக்கொதிப்பு அதிகமாய் சிரமப்படுவீர்கள்)

இப்படியாக பல அலைச்சலுக்கு பிறகு, மூன்று மாதத்திற்கான தற்காலிக அட்டையை நம் கையில் தரும்பொழுது, மூன்று மாதம் முடிந்திருக்கும். "The operation was a success but the patient died" என்ற பழமொழி நமக்கு நினைவுக்கு வரும்.

நிரந்தர அட்டை வாங்கும் படலம்

இப்படி பல போராட்டங்களுக்கு பிறகு, தற்காலிக அட்டை வாங்கியும் தொழிலாளர்கள் அதை பயன்படுத்த முடியாது. நிரந்தர அட்டையாவது வாங்கி கொடுக்கலாம் என மீண்டும் கொடுத்தால்... வாங்கியதும் நம் முன்னே ஒரு பெட்டியில் போடுவார்கள். ஒரு மாதம் கழித்து வரச் சொல்வார்கள். ஒரு மாதம் கழித்து போய் நின்றால்....

• மேனேஜர் விடுமுறையில் போய்விட்டார். அதனால், கையெழுத்து போட ஆளில்லை.

• நிரந்தர அட்டை இப்பொழுது ஸ்டாக் இல்லை. விரைவில் வந்துவிடும்.

• கணிப்பொறியில் விவரங்களை அடித்து, பிரிண்ட் எடுத்து மேனேஜர் கையெழுத்து போட்டு வேலையை முடிக்க நிறைய நேரம் பிடிக்கிறது. ஒரு நாளைக்கு சில கார்டுகள் மட்டுமே அடிக்க முடிகிறது.

• மின்சாரம் பல நேரம் இல்லாமல் இருக்கிறது.

இன்னும் இது மாதிரி பல காரணங்கள் சொல்லி இரண்டு மாதம் இழுத்தடிப்பார்கள். விக்கிரமாதித்தன் மாதிரி சளைக்காமல் போய்கொண்டேயிருக்க வேண்டும். பிறகு, ஒருநாள் மனம் இரங்கி, பெட்டியில் போட்டுக்கொண்டே வந்தார்கள் அல்லவா! அதில் நம்மையே தேடித்தாருங்கள் என்பார்கள்.

மலை போல் குவிந்திருக்கும், நூற்றுக்கணக்கான தற்காலிக அட்டைகளில்...அரைமணி நேரம் தேடினால், நீங்கள் மிகுந்த திறமைசாலி மற்றும் அதிர்ஷ்டசாலி என்றால் நீங்கள் கொடுத்திருந்த நாலும் கிடைத்துவிடும். துரதிருஷ்டசாலியாக இருந்தால், இரண்டு அல்லது ஒன்று தான் கிடைக்கும்.

அவர்களிடம் கொடுத்தால் “நான் தயாரித்து வைக்கிறேன். அடுத்த வாரம் வாருங்கள்” என்பார்கள். அதிலும் ஒரு கண்டிசன் “நீங்கள் லேமினேட் செய்து கொள்ள வேண்டும். நாங்க செய்தால் இன்னும் 15 நாட்கள் தாமதமாகும்” என்பார்கள் கூலாக.

இப்படி பல படலங்கள் தாண்டி, இந்த நிரந்தர அட்டையை வாங்கி அந்த தொழிலாளியிடம் கொடுக்க போகும் பொழுது, ஒரு வேளை வேலையை விட்டே அவர் போயிருப்பார். கையில் இருக்கும் “Permanent Card” “Dead card”யாக உருமாறியிருக்கும்.

சென்னையில் சில அலுவலங்கள் மட்டும் இப்படியில்லை. எல்லா இ.எஸ்.ஐ அலுவலகங்களும் கொஞ்சம் ஏற்ற இறக்கத்தோடு இழுத்தடிப்பதில் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள்.

இப்படி இ.எஸ்.ஐ. இழுத்தடிப்பது யாரை பாதிக்கும் என்றால்... தொழிலாளியைத் தான். சேர்ந்த முதல் மாதத்திலிருந்தே அவருடைய சம்பளத்திலிருந்து இ.எஸ்.ஐ.க்கான பணம் பிடிக்க தொடங்கிவிடுவார்கள். இவர்கள் 6 மாதம் கழித்து தரும் வரை வெளியில் தான் மருத்துவம் பார்க்கிறார்கள். ஒருவருக்கு உடல் நலக்குறைவு என்றால், மருத்துவருக்கே ரூ. 50 ரூ. 100 என கொடுக்க வேண்டியிருக்கிறது. இது போக மருந்து, மாத்திரைகளின் விலை வேறு தாறுமாறாக இருக்கிறது. தொழிலாளிகளின் வாழ்க்கை ஏற்கனவே நொந்து போய்கிடக்கிறது.

இப்படி, தொழிலாளர்களின் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட கார்ப்பரேசன் தொழிலாளர்களிடமிருந்து மாதம் மாதம் பணத்தையும் வாங்கிகொண்டு, இந்த லட்சணத்தில் இயங்குகிறது.

இப்படி மோசமான முறையில் வேலை செய்கிறார்களே, நாம் கம்ளைண்ட் பண்ணலாமே என நினைத்தால், இவர்கள் எப்பொழுதும் கவனமாக அத்தாட்சியே தருவதில்லை. வலியுறுத்தி கேட்டாலும்... அப்படி ஒரு சிஸ்டமே இல்லை என்பார்கள். இவர்களுடைய புத்திசாலித்தனத்தையெல்லாம் இழுத்தடிப்பதில் தான் காட்டுகிறார்கள்.

இந்த நிலை தொடர்ந்தால், இதையே காரணம் காட்டி எல்லாவற்றையும் தனியார் மயமாக்கி கொண்டிருக்கிற அரசு தனியார்மயமாக்கிவிடும்.

அப்பொழுதும் பாதிக்கப்படுவது தொழிலாளர்கள் தான். ஆகையால், இ.எஸ்.ஐ யால் பாதிக்கப்படுகிற தொழிலாளர்கள் இதன் எதிர்கால பாதிப்பை உணர்ந்து, அந்தந்த அலுவலகத்தில் மோசமாய் வேலை செய்பவர்களை கண்டிக்க வேண்டும்.

அரசை இ.எஸ்.ஐ-யை சரியான முறையில் இயக்கு என நிர்ப்பந்திக்க வேண்டும்.

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

நீங்கள் சொல்வது சரி தோழர் ஆனால்

அந்த நிர்வாகம் குறிப்பிட்ட தொழிலாளி தனது நிறுவனத்தில் வேலை செய்கிறார் என்று ஒரு கடிதம் கொடுத்தால் அந்த தொழிலாளிக்கு மருத்துவ சிகிச்சை தரப்படுகிறது

குருத்து said...

தோழர்,

நான் சொல்வது ஒருவர் முதன்முதலில் விண்ணப்பித்து அடையாள அட்டை தருவதில் உள்ள பிரச்சனை.

நீங்கள் சொல்வது form 37. அடையாள அட்டை வாங்கிய பின்பு, சில காலம் இ.எஸ்.ஐ. மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல், திரும்பவும் போகும் பொழுது இவர் அந்த நிறுவனத்தில் வேலை செய்கிறாரா என தெரிந்து கொள்ள உதவும் பாரம்.

ஏனென்றால், நிறுவனம் 6 மாதத்திற்கு ஒருமுறை தான், தன்னிடம் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள். எவ்வளவு நாள் வேலை பார்த்தார்கள் என்ற கணக்கை தாக்கல் செய்கிறது.