> குருத்து: யோகா அனுபவம் (3)

May 27, 2009

யோகா அனுபவம் (3)



யோகா பயிற்சியின் அனுபவங்களை எழுதும் தொடர்ச்சியில்... இந்த பதிவு.

யோகா செய்வதால் எனக்கு கிடைக்கும் பலன், பிறகு இந்தந்த தொல்லைகளுக்கு யோகா நல்லது என நான் பட்டியலிடுவதைக் காட்டிலும், தொல்லைகளிலிருந்து விடுப்பட்டவர்களே… அவர்களுடைய சொந்த வார்த்தைகளில் சொல்வது என்பது இன்னும் அழுத்தமாய் இருக்கும். மேலும், ஆண்கள் யோகா செய்வது எளிது. பெண்களுக்கு சிரமம் என பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அதற்கும் இந்த பதிவு விளக்கம் தருகிறது.

நான் செல்லும் யோகா மையத்தில் மூன்று மாதங்களுக்கொருமுறை யோகாவால் உள்ள பலன்களை சொல்லுங்கள் என யோகா ஆசிரியர் கோருவார்.

சிலர் சொன்னார்கள். நீங்களும் கேளுங்கள்.

ஆங்கில பள்ளி ஆசிரியை – வயது 38

‘கடந்த மூன்றரை ஆண்டுகளாக யோகா வகுப்புக்கு வருகிறேன். மூச்சிரைப்பு பிரச்சனையால் எனக்கு பல ஆண்டுகளாக தொந்தரவு. இதனால் தினசரி வேலைகள் செய்வதற்கே மிகச் சிரமப்பட்டேன். மாதத்தில் பாதிநாள்கள் மருத்துவமனைக்கு சென்றுவருவேன். மருந்தின் துணையோடு தான் வாழ்ந்து வந்தேன்.

யோகா பயிற்சிக்கு பின், மூச்சிரைப்பு கட்டுப்பட்டிருக்கிறது. மருத்துவரை மாதம் ஒரு முறை அளவில் தான் பார்க்கிறேன். முன்பு முகம் எப்பொழுதும் வாடியிருக்கும். இப்பொழுது மலர்ச்சியாக இருக்கிறது.

ஆங்கில பள்ளி ஆசிரியை – வயது 35

கடந்த 8 மாத காலமாக வகுப்புக்கு வருகிறேன். இடுப்பு வலி மிக அதிகமாக இருந்ததால்... என்னால் உட்கார, நிற்க என்பது மிக சிரமமானதாக இருந்தது. இப்பொழுது 2 மணி நேரம் என்றாலும் வலி இல்லாமல் உட்காரவோ, நிற்கவோ முடிகிறது. 5கிலோவிற்கும் மேலே எடை குறைந்திருக்கிறேன். தொப்பை நன்றாக குறைந்துவிட்டது. 5 வயது குறைந்த மாதிரி இருக்கு. நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க முடிகிறது.

52 வயது பெண்மணி – வீட்டில் இருப்பவர்

கடந்த 4 ½ வருடமாக யோகா வருகிறேன். தைராய்டு பிரச்சனையால் அவதிப்பட்டேன். யோகா தொடர்ந்து செய்வதால், கட்டுப்பட்டிருக்கிறது(பேலன்ஸ்சிங்). யோகா செய்வதை விட்டுவிட்டால் தைராய்டு பிரச்சனை செய்கிறது.

33 வயது பெண்மணி – வீட்டில் இருப்பவர்

2 வருடமாக யோகா வகுப்புக்கு வருகிறேன். வருவதற்கு முன்பு எனக்கு தைராய்டு பிரச்சனை, ஒற்றை தலைவலி, முதுகுவலி இருந்தது. அதிகமான கோபம் வரும். தொடர்ந்து வகுப்புக்கு வருவதால் இப்பொழுது ஒற்றை தலைவலியும், முதுகுவலியும் இல்லை. முக்கியமாக எதற்கெடுத்தாலும் கோபப்படுவேன். வீண்பயமும், சந்தேகமும் இருந்து கொண்டே இருக்கும். இது ஒரு மன வியாதியோ என நினைத்து கொண்டேயிருந்தேன். இப்பொழுது முற்றிலும் குணமாகிவிட்டேன். இப்பொழுது மனசும் உடம்பும் லேசாக இருக்கிறது.

34 வயது – ஆண் - மேனேஜர்

எனக்கு தொடர்ச்சியாக முதுகுவலியும், கழுத்து வலியும் இருந்தது. மேலும், உடல் கனத்து, நிறைய சோம்பறித்தனத்துடன் இருந்து வந்தேன். இப்பொழுது 6 மாத காலமாக யோகா செய்வதால்... முதுகுவலியும், கழுத்துவலியும் இல்லை. உடல் லேசாக இருக்கிறது.

35 வயது – ஆண் - மேனேஜர்

அலர்ஜி பிரச்சனையால், அடிக்கடி ஜலதோசம் பிடித்து வந்தது. அதன் வளர்ச்சியில், ஆஸ்துமாவில் கொண்டு வந்து நிறுத்தியது. தொடர்ச்சியான மருந்து, மாத்திரைகள். அதனால், நரம்பு தளர்ச்சியே வந்துவிட்டது. ஒரு சமயத்தில், இயங்குவதோ, நன்கு சிந்தித்து வேலை செய்வதே சிரமமாகி போனது. நம்பிக்கையிழந்து சோர்வுற்று இருந்தேன். யோகா – கடந்த 9 மாத காலமாக தொடர்ச்சியாக செய்து வருகிறேன். நல்ல முன்னேற்றம். ஜலதோசம் பிடிப்பது நின்றது. உடலும், மனசும் லேசாக ஆனது. மருந்து, மாத்திரைகள் எப்பொழுதாவது தான் சாப்பிடுகிறேன். இப்பொழுது 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறேன்.

.....

இப்படி இன்னும் பலர் சொன்னார்கள். சுருக்கமாய்...

7ம் வகுப்பு படிக்கிற பையன்... வகுப்பில் நிறைய பேசுவதாய் என் மேல் கம்ளைன்ட். இப்பொழுது குறைவாக பேசுவதாக சொல்கிறார்கள்.

27 வயது – வேலைக்கு செல்லும் பெண். முன்பெல்லாம், எப்பொழுதும், உடலிலும், மனதிலும் ஒரு பதட்டம் இருந்து கொண்டேயிருக்கும். இரண்டு மாத காலமாக யோகா செய்வதால்.. இப்பொழுது பதட்டம் குறைந்து இருக்கிறது.

37 வயது – விற்பனை பிரதிநிதி - ஆண் - யோகா செய்வதால்... என்னால் ஒழுக்கமாக இருக்க முடிகிறது. நாள் முழுவதும்...சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.

******

இன்னும் எழுதுவேன்.

******

மேலும் படிக்க...

முந்தைய பதிவுகள்

யோகா அனுபவம் – 1
யோகா அனுபவம் - 2

6 பின்னூட்டங்கள்:

Anonymous said...

சோதனை

ஜெயந்தி said...

ஒற்றை தலைவலி என்னை பாடாய் படுத்துகிறது. யோகா சரிசெய்கிறதா? தகவலுக்கு நன்றி.

குமரன் said...

இது நடந்து சில ஆண்டுகள் கடந்துவிட்டன. முன்பு ஜிம்முக்கு போய் கொண்டிருந்தேன். திடீரென ஞானம் வந்து யோகா கற்றுக்கொள்ளலாம் என நினைத்து, ஒரு மாஸ்டரிடம் ஒரு பத்து நாள் போனேன். அவர் வீட்டிலேயே சொல்லி தந்தார். நான் ஒருவன் மட்டுமே மாணவன்.

இங்கு பல பேர் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதாக சொல்கிறார்கள். அப்பொழுது, நான் யோகா செய்த பொழுது, நாள் முழுவதும் டல்லாக இருந்தது. பிறகு, நிறுத்திவிட்டேன்.

மீண்டும் ஜிம்மிக்கு போனால், யோகாவை பற்றி கேட்டு கேட்டு என்னை கலாய்த்துவிட்டார்கள்.

குருத்து said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்ட ஜெயந்தி மற்றும், நொந்தகுமாரனுக்கும் நன்றிகள்.

வடுவூர் குமார் said...

இது எல்லோருக்கும் பொருந்திவருவதில்லை.
தொடர்ந்து செய்ய வேண்டும்.

குருத்து said...

//இது எல்லோருக்கும் பொருந்திவருவதில்லை.
தொடர்ந்து செய்ய வேண்டும்.//

நீங்கள் சொல்வது புரியவில்லை குமார். கொஞ்சம் விளக்குங்களேன்.

தொடர்ந்து யோகா செய்ய வேண்டும். இல்லையென்றால்... பலன் கிடைக்காது. அதை தொல்லைகளிலிருந்து விடுபட்டவர்களே சொல்லத்தான் செய்கிறார்கள்.