> குருத்து: இ.எஸ்.ஐ. இரண்டு மனைவிகள் இருந்தாலும் பாதுகாப்பு தருகிறது!

July 4, 2009

இ.எஸ்.ஐ. இரண்டு மனைவிகள் இருந்தாலும் பாதுகாப்பு தருகிறது!


செய்தி ஆச்சர்யப்படுத்துகிறதா! இதோ ஆதாரத்தை ஸ்கேன் செய்து இணைத்துள்ளேன். தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இதுநாள் வரைக்கும் ஒரு குடும்பத்திற்கு தான் மருத்துவ பாதுகாப்பு கொடுத்து வந்தது. இப்பொழுது இரண்டு குடும்பங்கள் இருந்தாலும்... பாதுகாப்பு தருகிறது. இரண்டு பொண்டாட்டிகாரர்கள் இதுவரை பட்டபாட்டுக்கு விமோசனம் கிடைத்திருக்கிறது.

நேற்று ஒரு தொழிலாளிக்காக இ.எஸ்.ஐ. கார்டு வாங்க போனால்... இப்படி கையில் தருகிறார்கள்.

ஒரு தொழிலாளி வேலைக்கு சேர்ந்து, அவரிடம் போட்டோ வாங்கி, இ.எஸ்.ஐ-யிடம் விண்ணப்பம் செய்தால்... தற்காலிகமாக மூன்று மாதம் மருத்துவம் பார்த்துகொள்வதற்கு ஒரு ஸ்லிப் தருவார்கள். இந்த ஸ்லிப்பையே "பிறகு வா! அடுத்த வாரம் வா! அவர் லீவு! இவர் லீவு" என இழுத்து இழுத்து நம் கையில் தருவதற்கு மூன்று மாதம் ஓடிவிடும். பிறகு, நிரந்தர கார்டு வாங்க விண்ணப்பித்தால்... " ஸ்கேன் ரிப்பேர், மின்சாரம் இல்லை, கையெழுத்து போட வேண்டிய மேனேஜர் விடுமுறையில் இருக்கிறார். நிறைய சேர்ந்து விட்டதால்... தலைமை அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளோம்!" என இழு இழு என இழுத்து... நம் கையி தருவதற்குள் இரண்டு மூன்று மாதம் ஆகிவிடும்.

ஆக, ஒரு தொழிலாளி வேலைக்கு சேர்ந்தால்... இ.எஸ்.ஐ. கார்டு தருவதற்கு 6 மாதம் இழுத்துவிடுகிறார்கள். இப்படி எல்லா கூத்துகளும் முடிந்து... நம் கையில் தரும்பொழுது... பல தொழிலாளிகள் வேறு நிறுவனத்திற்கு மாறிவிடுவார்கள். இதை தான் "ஆபரேசன் வெற்றி! நோயாளி செத்துபோயிட்டான் என்பார்கள்!"

இப்படி தருகிற நிரந்தர அட்டையை தான் மேலே பார்க்கிறீர்கள். அந்த குறிப்பிட்ட தொழிலாளி ஒரு மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் ஏகபத்தினிக்காரனாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு இரண்டு பொண்டாட்டி இரண்டு பிள்ளைகள் என தப்பாக கார்டு தருகிறார்கள். இவர்கள் கார்டு தருகிற லட்சணம் இவ்வளவு தான்!

பின்குறிப்பு : தவறுகள் சகஜம் தானே! குறிஞ்சிப்பூ பூப்பது போல எப்பொழுதாவது தவறு செய்தால்..அதை பெரிசுபடுத்துவதா! என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது! ஆணை, பெண் என போட்டுவிடுவது, குடும்பத்தினர் பெயரையே அடிக்காமல் விட்டுவிடுவது, டிஸ்பன்ஸரி பெயர் போடாமல் தருவது என கார்டுகளில் இதுவரைக்கும் பல தவறுகள் செய்திருக்கிறார்கள். இரண்டு பொண்டாட்டி தவறு என்பது எவ்வளவு பெரிய விசயம்?! ஒரு நல்ல குடும்பத்தில் பூகம்பம் கிளம்பிவிடும் அல்லவா!

மேலும், இது ஒருவர் தயாரித்து, நேரடியாக தொழிலாளி கைக்கு வருவதில்லை. ஒருவர் தயாரித்து, ஒருவர் சோதித்து, அங்குள்ள கிளை அதிகாரி (மேனேஜர்) பச்சை மையில் கையெழுத்திட்டு தருவார்.

0 பின்னூட்டங்கள்: