> குருத்து: காங்கிரசு அரசின் புள்ளி விவர பித்தலாட்டங்கள்!

July 31, 2009

காங்கிரசு அரசின் புள்ளி விவர பித்தலாட்டங்கள்!

நன்றி : Lightink

முன்குறிப்பு : பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரம் காங்கிரசுகார்களிடம் கைமாறிய பிறகு, கடந்த 60 ஆண்டுகளாக பெரும்பான்மையான காலங்களில்... மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சி ஆண்டிருக்கிறது.
அவர்களுடைய இந்த 60 ஆண்டு கால சாதனை பெரும்பான்மையான உழைக்கும் மக்களை அரிசிக்காக கைஏந்த வைத்தது தான். இப்பொழுது அதிலும் தில்லு முல்லு பண்ணுகிறார்கள் அயோக்கியர்கள்.

நாம் கையேந்தும் வரைக்கும் தான் அவர்கள் இப்படி தில்லு முல்லு காட்டுவார்கள். நாம் விளைவித்த நம் தானியங்களை கிடங்குகளில் உள்ளே புகுந்து நாம் கைப்பற்றும் காலம் என்றைக்கு வரப்போகிறதோ?

****
காங்கிரசு அரசின் புள்ளி விவர பித்தலாட்டங்களை பதிவர் லைட்ங்க் விரிவாக பதிவு செய்துள்ளார். படியுங்கள்.
****
காங்கிரஸ் கட்சியானது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் தன்னுடைய தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மாதம் ஒன்றிற்கு 25 கிலோ அரிசி அல்லது கோதுமை, கிலோ 3 ரூபாய் என்ற வீதத்தில் வழங்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருந்தது.

இப்போது ஆட்சிக்கும் வந்துவிட்டது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் விண்ணைநோக்கி வேகமாகச் சென்று கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அளித்திட்ட உறுதிமொழியை நிறைவேற்றக்கோரி நிர்ப்பந்தம் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து ஆட்சியாளர்கள் இப்போது ஒரு புதிய சூழ்ச்சியை மேற்கொண்டிருக்கிறார்கள். நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளை அரசு கடைப்பிடித்த தன் விளைவாக, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம்.

தேசிய மாதிரி சர்வேயானது, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களைக் கணக்கிடும் முறையை மாற்றியமைத்துவிட்டது. இதன்படி, 1993-94இல் 36 சதவீதமாக இருந்த வறுமை விகிதம், 1999-2000இல் 26.1 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அதாவது ஐந்தாண்டுகளுக்குள் 10 சதவீதம் குறைந்துவிட்டதாம். இது அரசாங்கம் அவிழ்த்துவிட்டுள்ள புதுச்சரடு. மக்களை எவ்வளவு ஏமாற்ற முடியும் என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் வேறு இருக்க முடியாது.

அரசாங்கம் அமைத்திட்ட அர்ஜூன் சென் குப்தா தலைமையிலான குழு தன்னுடைய அறிக்கையில், நாட்டின் மக்கள் தொகையில் 77 சதவீத மக்கள், அதாவது 83.6 கோடி மக்கள், ஒரு நாளைக்கு 20 ரூபாய் கூட வருமானமின்றி உழன்று கொண்டிருக்கிறார்கள். இந்த 20 ரூபாயில் இன்றைக்குள்ள விலைவாசி உயர்வில் என்ன செய்ய முடியும்?

பருப்பு, தானியங்கள், சமையல் எண் ணெய்கள், காய்கறிகள், அரிசி, கோதுமை என
அனைத்துப் பொருள்களின் விலைகளும் சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளன.

உண்மை நிலைமை இவ்வாறிருக்க, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் குறைந்துவிட்டதாக, அரசு அறிவிக்கிறது.

இவ்வாறு அரசு அறிவிப்பதற்குக் காரணம், அரசு அளித்திட இருப்பதாகக் கூறும் சுகாதார இன்சூரன்ஸ் போன்ற பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களையும் பெரும் பகுதி மக்கள் பெற முடியாமல் செய்வதற்கே யாகும்.

இந்தியாவில் ஏழைகளின் நிலைமை குறித்து உலக வங்கி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள மக்களில் 42 சதவீதத்தினர் உலக அளவில் கணக்கிடப்படும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்வதாக அது குறிப்பிட்டிருக்கிறது. அதன் உலக உணவுத் திட்டத்தின்படி, உலகத்தில் பட்டினியால் வாடுவோரில் 50 சதவீதத்தினர் இந்தியாவில் இருக்கிறார்கள். இந்திய மக்கள் தொகையில் 35 சதவீதத்தினர் உடல் நலத்திற்குத் தேவையான உணவு விகிதத்தில் 80 சதவீதத்திற்கும் குறைவாகவே உண்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்களில் பத்தில் ஒன்பது பேர் ஊட்டச்சத்துக் குறைவாலும், ரத்தச் சோகையாலும் பீடிக்கப்பட்டவர்கள். கர்ப்பிணிப்பெண்களின் ரத்தச்சோகையால், பிறக்கும் குழந்தைகள் இறந்தே பிறக்கின்றன. வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் வறுமை ஒழிப்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. உண்மை நிலை இவ்வாறிருக்கையில் அரசு, மேலே கூறியவாறு வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கதைவிடுகிறது.

அதுமட்டுமல்ல, முன்பெல்லாம் வறுமைக் கோட்டைக் கணக்கிடும்போது ஒரு நபர் உட்கொள்ளும் உணவின் கலோரி அளவு 2400 ஆக இருக்க வேண்டும் என்று கணக்கிட்டு வந்தார்கள். அரசு இப்போது அதனையும் 2100 கலோரி என்று குறைத்துவிட்டது. அதாவது 2400 கலோரி உணவு உட்கொள்ள ஒருவருக்கு 567 ரூபாய் தேவைப்படும் என்றால், 2100 கலோரி உணவுக்கு 327 ரூபாய் போதுமானது. உண்மையில் இந்த 327 ரூபாய் கணக்கு என்பது 1868 கலோரி உணவுக்காகத்தான் வருகிறது.

இவ்வாறு புள்ளிவிவர பித்தலாட்டங்களைச் செய்து மக்களை ஏமாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அரசின் இத்தகைய இழிவான நடவடிக்கைகளை, ஏழை மக்களுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறும் தமிழக திமுக அரசு ஆதரித்து நிற்பது கேலிக் கூத்தாகும்

தொடர்புடைய பதிவுகள் :

இந்திய வளர்ச்சியின் உண்மையான நிலை - அர்ஜூன் சென்குப்தா

வறுமை கோடு என்றால்? - பத்திரிக்கையாளர் ஜவஹர்

1 பின்னூட்டங்கள்:

ஏகலைவன் said...

எளிய நடையில் ஒரு புள்ளிவிபரப் பட்டியல். சிறப்பாக இருக்கிறது இந்தத் தகவல், தோழர்.

அளவான, சிறிய பதிவில் நச்சென்று சொல்லப்பட்டிருக்கிறது. பதிப்பித்த உங்களுக்கும் இதனை எழுதிய அந்த தோழருக்கும் எமது புரட்சிக்ர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனைத் தொடர்ந்து இன்னும் அதிகமான பொருளாதாரம் சார்ந்த விசயங்களை உங்கள் பானியில் (அதாவது எளிய நடையில்) நிறைய எழுத வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அப்புறம்! வழக்கமாக நீங்கள் குறிப்பிடும் ‘குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்’ என்கிற கோரிக்கையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. குறைகள் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சொல்ல வந்த விசயம் சரியாக சொல்லி முடிக்கப்பட்டுள்ளது அவ்வளவுதான்.

தொடர்ந்து பேசுவோம் இணையத்தினூடாக,

தோழமையுடன்,
ஏகலைவன்