> குருத்து: பரஸ்பர நிதிகள் - ஒரு அறிமுகம்!

December 4, 2009

பரஸ்பர நிதிகள் - ஒரு அறிமுகம்!



முன்குறிப்பு : பரஸ்பர நிதிகள் - இது குறித்து அடிக்கடி பத்திரிக்கைகளில் விளம்பரம் பார்க்கிறோம். பரஸ்பர நிதிகள் என்னவென்றும், அதன் பயன்கள் மற்றும் குறைபாடுகள் பற்றி ஒரு அறிமுகத்தை பாலகார்த்திகா அவர்கள் எழுதிய இந்த கட்டுரை விளக்குகிறது.

மற்றபடி, மூழ்காது (risks) என்று சொல்வது, பொருளாதார நெருக்கடியின் பொழுது பரஸ்பர நிதிகளின் கதி என்னவாயிற்று என்பதை வரும் பதிவுகளில் பார்க்கலாம். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

******

பரஸ்பர நிதிகள் என்றால் என்பது ஒரு வித முதலீட்டு நிறுவனங்களே! 'சிறு துளி பெருவெள்ளம்' என்ற தத்துவத்தின் அடிப்படையில் இயங்குவன இந்தப் பரஸ்பர நிதிகள். நீங்கள் எத்தகைய முதலீடு செய்யவேண்டும் என்று விரும்பினாலும் அதற்கேற்ற ஒரு முதலீட்டுத் திட்டத்தை(Investment Scheme), பரஸ்பர நிதியங்கள் வழங்குகின்றன.ஏறத்தாழ இருபது வருடங்களாகப் பிரபலமாக இருக்கும் இந்தப் பரஸ்பர நிதியங்களுக்கான தொடக்கம் 1774ம் ஆண்டே ஹாலந்து நாட்டில் ஏற்பட்டது. இன்று பங்குச்சந்தைக்கு இணையாக பரஸ்பர நிதியங்கள் பல வந்துவிட்டன.

பரஸ்பர நிதியங்கள் எப்படிச் செயல்படுகின்றன?

ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட லட்சக்கணக்கான தொகையை, பங்கு நிறுவனங்களில் உள்ள நிதி நிர்வாகிகள் பல விதமான பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்கின்றனர். பங்குகளுக்குக் கிடைக்கும் பங்காதாயமும், கடன் பத்திரங்களில் கிடைக்கும் வட்டியும் முதலீடு செய்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகிறது. அது மட்டுமின்றி, நிதியங்கள் தம்மிடம் இருக்கும் பங்குகளை விற்பதால் கிடைக்கும் லாபம், முதலீட்டாளர்கள் தங்கள் பரஸ்பர நிதி முதலீடுகளை நிகர சொத்து மதிப்பினை(Net Asset Value-NAV) விடக் குறைவான விலையில் (Discount) செய்வதால் கிடைக்கும் லாபம் இவையும் பரஸ்பர நிதியங்களில் செய்யும் முதலீடுகளை கவர்ச்சிகரமாக மாற்றுகின்றன.

பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வதால் என்ன பயன்?

சாதாரணமாக நாமே நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வதை விட பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்வதால் கீழ்க்கண்ட பயன்கள் விளைகின்றன.


பயன் ஒன்று:
அபாயக்குறைவு. எந்த முதலீடாக இருந்தாலும் அதில் கொஞ்சம் ஆபத்து (Risk) இருக்கத்தான் செய்யும். ரிஸ்க் என்பதே இல்லாத முதலீடு எதுவுமே கிடையாது. ஆனால், நீங்கள் பங்குகளில் முதலீடு செய்கையில் பல்வேறு விதமான பங்குகளில் உங்களால்
ஈடுபட முடியாது. அதாவது பரவல் (Diversification) குறைவு. அது ரிஸ்க்கை அதிகரிக்கச் செய்கிறது. ஆனால் பரஸ்பர நிதியங்களில் நீங்கள் முதலீடு செய்யும்பொழுது, உங்கள் பணமும், உங்களைப் போன்ற பல முதலீட்டாளர்களின் பணத்துடன் சேர்ந்து பல வகை நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இதன் காரணமாக உங்கள் பணத்தின் மீதான ரிஸ்க் குறைகிறது

பயன் இரண்டு: திறமையும் அனுபவமும் மிக்க நிதி நிர்வாகம். நீங்கள் உங்கள் பணத்தை எந்தப் பங்கில் முதலீடு செய்வது என்று தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் பணத்தை சிறந்த, லாபம் தரக்கூடிய, நம்பிக்கைக்குரிய பங்குகளில் முதலீடு செய்வது பரஸ்பர நிதி நிறுவனங்களில் உள்ள நிதி நிர்வாகிகளின் பொறுப்பாகி விடுகிறது.

பயன் மூன்று: சிறிய அளவு முதலீடுகள். சிறிய முதலீடாக இருப்பின் பல விதமான பங்குகளில், பல நிறுவனங்களில் முதலீடு செய்ய இயலாது. அதற்கு நிறையப் பணம் தேவைப்படும். பரஸ்பர நிதியங்களில் நீங்கள் எவ்வளவு சிறிய அளவு தொகையையும் முதலீடு செய்ய இயலும். அத்துடன் சில பரஸ்பர நிதி நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது

பரஸ்பர முதலீடுகளின் வகைகள்:

பரஸ்பர நிதியில் செய்யப்படும் முதலீடுகளைப் பொதுவாக இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை - சமபங்கு நிதி (Equity Share Funds), நிலையான வருமானம் தருபவை (Fixed Income Funds)
சமபங்கு நிதி என்பது பல நிறுவனங்களில் பங்குகளில் முதலீடு செய்யப்படுவது. இப்பங்குகள் கொஞ்சம் அபாயகரமானவை எனினும், இதன் பரவல் (Diversification) காரணமாக, பொதுவாக நல்ல இலாபமீட்டக் கூடியவையாகவே திகழ்கின்றன. இவற்றின் இரண்டு உட்பிரிவுகள் சமநிலைப்பங்கு (Balance Fund) மற்றும் சிறப்பம்சப் பங்குகள் (Speciality Fund). சமநிலைப்பங்கு என்பது, சரியான விகிதத்தில் பங்குகளிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வதாகும். சிறப்பம்சப் பங்குகள் என்பது ஒரு குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கில் மட்டும் முதலீடு செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது. சில பரஸ்பர முதலீடு நிறுவனங்கள், நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் மட்டும் முதலீடு செய்வது, புகையிலை, மது முதலியவற்றுடன் தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் இருப்பது என்று சமூக உணர்வுடன் இணைந்த முதலீடுகளை மேற்கொள்கின்றன.

நிலையான வருமானம் தரும் பரஸ்பர நிதி முதலீடுகள்: பங்குகளில் முதலீடு செய்யாமல், திரட்டிய நிதியை அரசு மற்றும் தரமான நிறுவனங்களில் கடன் பத்திரங்களில், பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. இதனால் கிடைக்கும் வட்டியானது மாதாமாதம் இத்தகைய முதலீடுகளில் பணம் போட்ட முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப் படுகிறது.

இவை தவிர, குறுகிய கால கருவூல வரைவு (Treasury Bill), பணச்சந்தை முதலீடுகள் (Money Market Instruments) குறியீட்டு நிதி (Index Fund ) என்று மேலும் வகைகள் உள்ளன.

பரஸ்பர நிதி நிறுவனங்களின் குறைபாடுகள்:

கட்டணங்கள்: நேரடியாக நாமே முதலீடு செய்வதை விட பரஸ்பர நிதி நிறுவனங்களில் முதலீடு செய்கையில் லாபம் குறைவது உண்டு. ஏனெனில், நாம் பலவிதமான கட்டணங்களைச் செலுத்த நேரிடுகிறது.
நிதி நிறுவனங்களில் உண்மையாகவே அனுபவமும் திறனும் நிறைந்த நிதி நிர்வாகிகள்தான் இருக்கிறார்களா என்பது நமக்குத் தெரியாது.சரியான முறையில் நிர்வகிக்கப் படாத பரஸ்பர நிதிகளில் செய்யப்படும் முதலீடுகள் சரியான அளவு லாபத்தைக் கொடுப்பதில்லை. எனவே நல்ல தரமான, அனுபவமுள்ள நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்வது அவசியம். பரஸ்பர நிதிகள் குறித்து மேலும் சில தகவல்களைத் தொடரும் கட்டுரைகளில் காண்போம்.

- பாலகார்த்திகா

நன்றி : ஈழநேசன்

0 பின்னூட்டங்கள்: