> குருத்து: தேர்தல் புறக்கணிப்பு - சிறு வெளியீடு பாகம் 4!

April 8, 2011

தேர்தல் புறக்கணிப்பு - சிறு வெளியீடு பாகம் 4!


பாகம் 1 பாகம் 2 பாகம் 3

‘வாக்காளப் பெருமக்களே!’ என்று அலறும் ஒலிபெருக்கிச் சத்தம் இந்தத் தேர்தல் முடிவதற்குள் குறைந்தது சில யிரம் தடவைகளாவது உங்கள் காதுகளைக் குடைந்துவிடும். இந்தச் சொல்லின் பொருள் என்ன என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?

பண்ணையார்கள்- விவசாயிகள், முதலாளிகள்- தொழிலாளர்கள், அதிகாரிகள் – ஊழியர்கள் என்று பல்வேறு வர்க்கங்களாகப் பிரிந்திருக்கும் இந்தச் சமுதாயத்தில் கோடீசுவரன் முதல் குப்பன் சுப்பன் வரை எல்லோரையும் ஒரே பட்டியிலடைத்து ‘வாக்காளப் பெருமக்கள்’ ஆக்கி, இவர்கள் எல்லோருக்கும் பொதுவாக நடுநிலையாக ஒரு அரசாங்கத்தை நடத்த முடியுமா? முதலாளியும் தொழிலாளியும் ஒரே நபரைத் தங்களுடைய வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க முடியுமா? முடியாது. னால் நடந்து கொண்டிருப்பதென்னவோ அதுதான்.

நாங்கள் முதலாளிகளின் பிரதிநிதிகள் என்றோ, பண்ணையார்களின் பிரதிநிதிகள் என்றோ எந்தக் கட்சியும் சொல்லிக் கொள்வதில்லை. தாங்கள் பெரும்பான்மை ஏழை மக்களின் பிரதிநிதிகள் என்றுதான் எல்லா ஓட்டுக் கட்சிகளும் கூறிக்கொள்கின்றன. ஆனால், ஏழ்மையின் சாயலைக்கூட எந்த வேட்பாளரிடமும் நாம் பார்க்க முடிவதில்லை.

நாட்டிலேயே எண்ணிக்கையில் பெரிய வர்க்கம் விவசாயி வர்க்கம். நிலமற்ற கூலி விவசாயிகள் தஞ்சை மாவட்டத்தில் எலிக்கறி தின்றார்கள், பட்டினியால் செத்தார்கள். நெல், கரும்பு, பருத்தி, தென்னை விவசாயிகளும், தக்காளி முதலான காய்களைப் பயிரிட்ட விவசாயிகளும் கடன்கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அல்லது திருப்பூருக்கு கூலி வேலைக்கு ஓடுகிறார்கள். உலகமயமாக்கம் தோற்றுவித்த விலை வீழ்ச்சியால் போண்டியான நீலகிரி தேயிலை விவசாயிகளோ கோவை நகரில் மூட்டை தூக்கி வயிற்றைக் கழுவுகிறார்கள். இந்தப் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகள் எத்தனைப் பேர்?

கைத்தறிக்கான நூல் ரகங்கள் ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டதால் கைத்தறி நெசவுத் தொழிலே ஒழிந்து வருகிறது. ஜெ ஆட்சியில் கஞ்சித்தொட்டியின் முன் கையேந்தி நின்ற அந்தக் கைத்தறி நெசவாளர்களை எந்தக் கட்சி வேட்பாளராகத் தெரிவு செய்திருக்கிறது?

பன்னாட்டுக் கம்பெனிகளின் வரவால் அழிந்து வரும் சிவகாசியின் தீப்பெட்டித் தொழில், கோலா பானங்களால் கொல்லப்பட்ட சோடா கலர் கம்பெனிகள், சோப்பு, சீப்பு, ஊறுகாய், வத்தல், வறுவல், மிட்டாய் என பன்னாட்டு நிறுவனங்களால் க்கிரமிக்கப்படும் யிரக்கணக்கான குடிசைத் தொழில் மற்றும் சிறு தொழில் முனைவோருக்கும், சில்லறை வணிகர்களுக்கும் எந்தக் கட்சி சீட் கொடுத்திருக்கிறது?

தொழிற்சங்க உரிமைகள் இழந்து, வேலை உத்திரவாதம் இழந்து, குறைந்தபட்ச ஊதியம் எனும் சட்டப் பாதுகாப்பும் இன்றி நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறார்களே தொழிலாளர்கள் அவர்களுக்கும், நாடெங்கும் இரைந்துகிடக்கும் உதிரித் தொழிலாளர்களுக்கும் எந்தக் கட்சியில் பிரதிநிதித்துவம் இருக்கிறது?

பெயருக்குக் கூட நம்முடைய வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் இல்லாத மன்றம், நம்முடைய நலனைப் பற்றி எப்படிச் சிந்திக்க முடியும்?

‘என்ன சாதி, எவ்வளவு ரூபாய் செலவு செய்வாய்” என்ற இரண்டு கேள்விகளின் அடிப்படையில்தான் ஓட்டுக் கட்சிகளின் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். ‘பெரிய’ சாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் வசதி சிறியதாக இருக்கும் கட்சித் தொண்டன் வேட்பாளராகவே முடியாது. இது தெரிந்த விசயம்தானே என்று நீங்கள் கருதலாம்.

விசயம் தெரிந்த பிறகும் நீங்கள் வாக்களிக்கிறீர்கள் என்றால் இவர்களை உங்கள் பிரதிநிதிகளாக ஒப்புக் கொள்கிறீர்கள் என்றே பொருள்.

சினிமாவில் நடித்து கோடி கோடியாய்ச் சம்பாதித்து, பிறகு தி.மு.க வில் சேர்ந்து எம்.பி பதவியும் வாங்கிவிட்ட சரத்குமார் என்ற நடிகனுக்கு மந்திரிப்பதவி வேண்டுமாம். இல்லை யென்றால் நாடார் சமுதாயம் பொங்கி எழுமாம். இதை ஆதரிக்க ஒரு கூட்டம். பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகக் கட்டுரைகள். அதே நாடார் சமூகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதை எதிர்த்தும், கோகோ கோலாவை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கிறார்களே இந்த நடிகனா அவர்களுடைய பிரதிநிதி?

விவசாயம் பொய்த்துப் போய், ஆந்திராவில் முறுக்கு சுட்டு விற்கவும், கேரளத்து எஸ்டேட்டுகளில் கூலி வேலை பார்க்கவும், திருப்பூர் பனியன் கம்பெனியில் கொத்தடிமையாக உழைத்து கந்துவட்டிக் கடனை அடைக்கவும் ஓடுகிறார்கள் மதுரை மாவட்டத்தின் தேவர் சாதியைச் சேர்ந்த விவசாயிகள். ‘சின்ன ஜமீன்’ கார்த்திக்கா இவர்களுடைய பிரதிநிதி?

குடித்து வளர்ந்த தாமிரவருணித் தண்ணீரையே கோகோ கோலாகாரனுக்குக் கூட்டிக் கொடுத்துவிட்டு, அதற்கு உத்தரவிட்ட ஜெயலலிதாவுடன் கூட்டணியும் அமைத்திருக்கும் கோபாலசாமியா ஈழத்தமிழர் விடுதலைக்குப் பிரதிநிதி?

திண்ணியத்தில் மலம், திண்டுக்கல்லில் சிறுநீர், தென் மாவட்டமெங்கும் தனிக்குவளை, பாப்பாப்பட்டி கீரிப்பட்டியில் அரசாங்க முத்திரை பெற்ற தீண்டாமை….. தலித் மக்களுக்கு ஜெயலலிதா அருளிச் செய்துள்ள இந்த ‘சலுகை’களெல்லாம் போதாதென்று 9 தொகுதிகளையும் சேர்த்து வாங்கியிருக்கிறார் திருமா. புரட்சித் தலைவியிடம் சொல்லி பொதுச் சுடுகாடு களில் தலித் பிணங்களுக்கும் 9 இடங்களை பெற்றுத் தருவாரா இந்த தலித் பிரதிநிதி?

கல் சுமக்கவும் கட்டிட வேலை பார்க்கவும் பெங்களூருக்கு ஓடும் சேலம், தருமபுரி வன்னிய விவசாயிகளின் பிள்ளைகளை டாக்டராக்கி அழகு பார்க்கத்தான் மருத்துவக் கல்லூரி கட்டுகிறாரா மருத்துவர் அய்யா?

பாகிஸ்தானைப் பந்தாடி, ஊழல் போலீசை ஒழித்து, ஸ்பத்திரி லஞ்சத்தை ஓழித்து, இருட்டரங்கில் இந்தியாவை வல்லரசாக்கிக் காட்டிய விஜயகாந்த், வெளிச்சத்துக்கு வந்தவுடன் சுயநிதிக் கல்லூரி முதலாளியாகி விட்டார். இலவச அரிசிக்குப் பதில் இலவசக் கல்வி தருகிறேன் என்று அவர் ஒரு பேச்சுக்குக் கூட சொல்லாத மர்மம் என்ன? அவர் கல்விக் கொள்ளையர்களிடம் லட்சக்கணக்கில் ஜேப்படி கொடுத்த மாணவர்களின் பிரதிநிதியா, ஜேப்படி அடித்த ஜேப்பியாரின் பிரதிநிதியா?

உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிகிறது உண்மை. இதை மறைப்பதற்குத்தான் ஓட்டுப்பொறுக்கிகள் அரும்பாடு படுகிறார்கள். தங்களுக்கு சீட் கிடைக்காத சோகத்திற்காக உங்களை அழச்சொல்கிறார்கள். தங்களுக்குப் பொறுக்கித் தின்னும் வாய்ப்பு மறுக்கப்பட்டதை விளக்கி அதற்காக உங்களைக் கோபப்படச் சொல்கிறார்கள். தங்களுடைய அரசியல் எதிரிகளின் சந்தர்ப்பவாதங்களைச் சொல்லி உங்களைச் சிரிக்கச் சொல்கிறார்கள். சிம்ரன், விந்தியா போன்ற நடிகைகளை மேடையேற்றி அவர்களை ரசிக்கச் சொல்கிறார்கள். உங்களுடைய வர்க்கத்தின் கோரிக்கை என்ன என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்காமல், ‘வாக்காளப் பெருமக்களாகவே’ நீடிக்கும் வரை இவர்கள் நம்முடைய பிரதிநிதிகளாவதைத் தடுக்க முடியாது; பிதாமகன் சினிமாவில் வரும் ஒரு காட்சியைப் போல, நடிகை சிம்ரன் ஊர் ஊராகப் போய் இலவசமாக டான்ஸ் ஆடிக்காண்பித்து விட்டு, தன்னுடைய ரசிகப் பெருமக்களை அப்படியே வாக்காளப் பெருமக்களாக மாற்றி, முதல்வர் நாற்காலியிலும் அமர்ந்துவிட முடியும்.

வாக்காளப் பெருமக்களாகவே நீடிக்கப் போகிறீர்களா, வர்க்க உணர்வு கொண்ட உழைக்கும் மக்களாக மாறப் போகிறீர்களா என்பதுதான் எங்களுடைய கேள்வி.

மறுகாலனியாக்கத்தை முறியடிக்க தேர்தல் தீர்வல்ல!

தி.மு.க கூட்டணிக்கும் அ.தி.மு.க கூட்டணிக்குமிடையில் என்ன கொள்கை வேறுபாடு? ஹமாம் சோப்புக்கும் லைப்பாய் சோப்புக்குமிடையில் உள்ள வேறுபாடுதான் இவர்களுக்கிடையிலான கொள்கை வேறுபாடு. இவர்கள் பேசுவதைக் கவனிப்பதற்குப் பதிலாக, பேசாதவற்றைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்.

தமிழகத்திலிருந்து போன மத்திய அமைச்சர்கள் மீது அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டுகிறார் ஜெயலலிதா. னால், சென்னைத் துறைமுகத்தை ஸ்திரேலிய நிறுவனத்துக்கு விற்றுவிட்டார் டி.ர்.பாலு என்றோ, அரசுத் தொலைபேசித் துறையை முடமாக்கி தனியார் தொலைபேசி முதலாளிகளைக் கொழுக்க வைக்கிறார் தயாநிதி மாறன் என்றோ, டிரிப்ஸ் (TRIPS) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மருந்துகளின் விலையை ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக்கிவிட்டார் அன்புமணி என்றோ ஜெயலலிதா குற்றம் சாட்டுவதில்லை. வை.கோ இவை பற்றியெல்லாம் மூச்சே விடுவதில்லை.

ஜெயலலிதாவின் சுனாமி ஊழல், வெள்ள நிவாரண ஊழல் பற்றியெல்லாம் விலாவாரியாகப் பேசும் தி.மு.க, தாமிரவருணி ற்றையே கோகோ கோலாவிற்குத் தாரை வார்த்த மாபெரும் ஊழலைப் பற்றி வாய் திறப்பதில்லை. தமிழகத்தில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களிலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் எவ்விதத் தொழிற்சங்க உரிமையும் இல்லாமல் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வைக்கப் பட்டிருப்பதை ‘ஜெயலலிதாவின் சர்வாதிகாரப் போக்கிற்கு’ ஒரு சான்றாகக் கூடக் காட்டுவதில்லை.

‘நோக்கியாவை நான் கொண்டு வந்தேன்” என்கிறார் தயாநிதி மாறன். ‘•போர்டு, ஹ¥ண்டாய் கம்பெனிகளை நான் கொண்டுவந்தேன்” என்று வாங்கிப் பாடுகிறார் ஜெயா. ‘தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட டைடல் பார்க் முதலான கணினித்துறை தொழில் வளர்ச்சிகளை அ.தி.மு.க அரசு தொடர்வதால், மேலும் முதலீடு போடுமாறு பில் கேட்ஸைக் கேட்டுக்கொண்டேன்” என்கிறார் கருணாநிதி.

சிவகங்கை கூட்டுறவு வங்கி மூடப்பட்ட விவகாரத்தைப் பேசி வரும் ஜெயலலிதா, விமான நிலையத் தனியார்மயம், காப்பீடு தனியார்மயம், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி போன்ற பிரச்சினைகளை ப.சிதம்பரத்துக்கு எதிராக தவறியும் பேசுவதில்லை.

உலக வங்கி – உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சி, அதனடிப் படையில் வகுக்கப்படும் இந்திய மக்களுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகள் கியவற்றில் இருவருமே முழுமையாக உடன்படுகிறார்கள். இவற்றைத் தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம்தான் தமிழகத்தை முதல் மாநிலமாக்க முடியுமென்றும் கூறுகிறார்கள். இந்தக் கொள்கைகளின் விளைவாகப் பாதிக்கப்படும் மக்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசைப் பலப்படுத்துவதையும் போலீசுக்குச் சலுகை வழங்குவதையும் போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள்.

இப்படி மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்துவதில் ஒரே கூட்டணியாகச் செயல்படும் இவர்கள், இந்தக் கொள்கைகளுக்கும் அரசியலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதாக மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள். தங்களுக்கிடையிலான இந்த முக்கியமான ஒற்றுமையைப் பார்க்காமல், முக்கியத்துவமற்ற வேற்றுமைகளைப் பெரிதுபடுத்திக் காட்டி அதிலேயே மக்களை மயங்கவும் வைத்திருக்கிறார்கள்.

இவ்விரண்டு கூட்டணிகளுமே பிழைப்புவாதக் கூட்டணிகள்தான் என்பது மக்களுக்குத் தெரிந்திருந்தாலும் வேறுமாற்று தெரியாததால், ‘ஏதோவொரு அயோக்கியனைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?” என்று சிந்திக்கிறார்கள். ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்று அவர்கள் சார்பில் வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். சில மூடர்கள் ‘விஜயகாந்துக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்தாலென்ன?” என்று விபரீதமாகச் சிந்திக்கிறார்கள்.

லஞ்சத்தை வெறுத்த மக்களை ‘லஞ்சம் தவிர்க்க முடியாதது’ என்று காலப்போக்கில் ஏற்கச் செய்ததைப் போல, குடிநீருக்கும் சிறுநீருக்கும் கூடக் காசு கொடுத்தாக வேண்டும் என்று மக்களைப் பழக்கியதைப்போல, கல்வியும் மருத்துவமும் காசுக்கு மட்டும்தான் என்பதை சகஜமாக்கியதைப் போல அரசியல் சீரழிவுக்கும் மக்களைப் பழக்கியிருக்கிருக்கிறார்கள்.

இந்தத் தேர்தல் ஜனநாயகம் சீரழிந்ததற்குக் காரணமானவர்கள் ஓட்டுப் பொறுக்கிகள் மட்டுமல்ல. மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக நாட்டின் இறையாண்மையும், மக்களின் வாழ்வுரிமைகளும் பன்னாட்டு நிறுவனங்களால் சூறையாடப்பட்டு, உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைகளுக் கேற்ப இந்திய அரசு ஆடிவரும் சூழலில், ‘ஜனநாயகம்’ என்பதும், ‘வாக்குரிமை’ என்பதும் கவைக்குதவாத கேலிப்பொருட்களாகி வருகின்றன.

நாடே அந்நிய வல்லரசுகளுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும்போது, இந்த பொம்மைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதால் என்ன பயன்? இராக்கை நேரடியாக க்கிரமித்துக் காலனியாதிக்கம் செய்கிறது அமெரிக்கா. அந்த திக்கத்தின் கீழ் ஏதோவொரு அமெரிக்கக் கைக்கூலியைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் போலித் தேர்தலைப் புறக்கணித்து அமெரிக்க இராணுவத்திற்கெதிராக யுதப் போராட்டம் நடத்துகிறார்கள் இராக் மக்கள்.

நாம் சந்தித்துக் கொண்டிருப்பதோ மறுகாலனியாதிக்கம். அன்று நம் நாட்டை வணிகம் என்ற பெயரில் அடிமைப்படுத்திய கிழக்கிந்தியக் கம்பெனியின் இடத்தில், இன்று பல பன்னாட்டு நிறுவனங்கள்; அந்த நிறுவனங்களின் எடுபிடிகளாக பல்வேறு ஓட்டுப்பொறுக்கிகள். இந்த ஓட்டுப் பொறுக்கிகளில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவா நாட்டை விடுவிக்க முடியும்? தேச விடுதலையை யாரேனும் ஓட்டுப் பாதையின் மூலம் வென்றெடுத்ததாக வரலாறு உண்டா?

இந்தத் தேர்தல் முறை என்பதொன்றும் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தோன்றியதுமல்ல் வேறு மாற்றே இல்லாத ஒரே ஆட்சி முறையுமல்ல. தனக்குச் சேவகம் செய்யும் கைக்கூலிகளை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியவைதான் இன்று நாம் காணும் சட்டமன்றமும், தேர்தல் முறையும். அன்று திவான் பகதூர்களும் ராவ்பகதூர்களும் சட்டமன்றப் பதவிச்சொகுசை அனுபவித்துக் கொண்டிருக்க, உண்மையான விடுதலை வீரர்கள் தெருவிலிறங்கிப் போராடினார்கள்.

அந்த ராவ்பகதூர்களின் வாரிசுகளான ஓட்டுப்பொறுக்கிகள் இன்று நாட்டை அந்நிய வல்லரசுகளுக்கு விலை பேசுகிறார்கள். பன்னாட்டு முதலாளிகள் வீசும் எலும்புத் துண்டுகளுக்கும், அரசுச் சன்மானங்களுக்கும் அடித்துக் கொள்வதையே ஜனநாயகம் என்று சித்தரிக்கிறார்கள்.

மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடும் நாங்கள், இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்கிறோம். மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போராட்டத்தினூடாக ஒரு புதியஜனநாயக அரசமைப்பை உருவாக்க வேண்டுமென்கிறோம்.

இலவசங்களுக்கு மயங்கியது போதும். வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டது போதும். நம் காலடியிலிருந்து நழுவித் தேசமே அந்நியன் கைகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. போராடி வென்றெடுத்த உரிமைகள் எல்லாம் நம் கைகளிலிருந்து ஒவ்வொன்றாய் உருவப்படுகின்றன. சூறைக்காற்றில் சிக்கிய காகிதமாய் பிடிமானமின்றி அலைக்கழிக்கப் படுகிறது நம் வாழ்க்கை.

நின்று ஒரு கணம் சிந்தியுங்கள். ஏன் என்று ஒரு முறை கேட்டுப் பாருங்கள். இந்தத் தேர்தலை விட்டால் வேறு வழியில்லை என்ற உங்கள் கருத்து மாறும்.

‘ஓட்டுப் போடாதே, புரட்சி செய்” என்ற எங்கள் முழக்கம் உங்களது முழக்கமாக உடனே மாறும்! நேபாளத்தின் மாவோயிஸ்டுகள், பிலிப்பைன்ஸின் ‘தேசிய மக்கள் படை’, பெருவின் ‘ஒளிரும் பாதை’, என்ற அணிவரிசையில் இந்தியாவின் நக்சல்பாரிப் பாதை விடுதலைக்கான புதிய வழியைப் படைத்துக் காட்டும்!

வெளியீடு
மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

****

நன்றி : நல்லூர் முழக்கம்

0 பின்னூட்டங்கள்: