> குருத்து: தோழர் பகத்சிங் - பிறந்தநாள்

September 28, 2011

தோழர் பகத்சிங் - பிறந்தநாள்


பகத்சிங் பிறந்த நாள் : 28/09/1907

தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல்நாள், சிறையின் இன்னொரு வார்டில் இருந்த புரட்சியாளர்களிடமிருந்து, அவருக்குக் குறிப்பு ஒன்று வந்து சேர்ந்தது. கடைசித் தருணத்தில் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்யும் யோசனை அதில் இருந்தது. இந்தக் குறிப்புக்கு பகத்சிங் பதில் அனுப்பினார். தமது தோழர்களுக்கு எழுதிய கடைசிக் கடிதம் பின்வருமாறு.

தோழர்களே!

உயிருடன் இருக்கும் ஆசை என்னுள்ளிலும் இருப்பது இயல்பானதே. நான் அதனை மூடிமறைக்க விரும்பவில்லை. ஆனால், என் விசயத்தில், உயிருடன் இருப்பது என்பது நிபந்தனைக்கு உட்பட்டது. நான் ஒரு கைதியாகவோ அல்லது கட்டுத்திட்டங்களுக்கு உட்பட்டோ, இருப்பதை விரும்பவில்லை.

என்னுடைய பெயர். இந்தியப் புரட்சிக் கட்சி (இந்துஸ்தானி இன்கலாப் பார்ட்டி)யின் ஒரு சின்னமாகிவிட்டது. புரட்சிக்கட்சியின் இலட்சியங்களும் தியாகங்களும் என்னை மிகவும் உயர்த்தியுள்ளன. நான் உயிருடன் இருந்தால் கூட ஒருக்கால் இந்த உயரத்தை எட்டியிருக்க மாட்டேன்.

இன்று என்னுடைய பலவீனங்கள் மக்களின் முன்னிலையில் இல்லை. தூக்கிலேற்றப் படுவதினின்றும் ஒருக்கால் நான் தப்பித்தால், அந்தப் பலவீனங்கள் வெளிப்படலாம். புரட்சிச் சின்னம் ஒளியிழக்கலாம், ஏன்? அது அறவே அழிந்தும் போகலாம். ஆனால் நான் துணிவுடனும், புன்னகையுடனும் தூக்குமேடை நோக்கிச் சென்றால் இந்தியத் தாய்மார்கள் தம் புதல்வர்கள் பகத்சிங் போல் விளங்கிட வேண்டும் என்று விரும்புவார்கள்; நாட்டின் விடுதலைக்காகத் தியாகம் செய்வோர்களின் எண்ணிக்கை, ஏகாதிபத்தியத்தின் அரக்கத்தனமான சக்தியினாலும் கூட புரட்சியைத் தடுத்து நிறுத்தச்செய்ய முடியாத அளவிற்குப் பெருகிவிடும்.

ஆனாலும் ஒரு விசயம் இன்றும் எனக்கு வேதனை தந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டுக்காகவும், மனித குலத்துக்காகவும் என் இதயத்தில் சில ஆசைகளும் அபிலாஷைகளும் இருந்தன; ஆனால் அவற்றில் ஆயிரத்தில் ஒரு பங்கைக் கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. நான் உயிருடன் இருந்திருந்தால், இந்த நோக்கங்களை எட்டும் வாய்ப்பு கிடத்திருக்கும்; என் ஆசைகளை நிறைவு செய்யவும் முடிந்திருக்கும்.

இதைத் தவிர, தூக்குமேடையிலிருந்து தப்புவதற்கான ஆசை என் இதயத்தில் இருந்ததில்லை. ஆகவே என்னை விடவும் பாக்கியசாலி யார்தான் இருக்க முடியும்? இப்பொழுதெல்லாம் நான் என்னைப் பற்றி பெருமையடைகிறேன். இறுதித் தேர்வுக்காக நான் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்; அந்தத் தேர்வு விரைவிலேயே நெருங்கி வந்திட வேண்டுமென்று விரும்புகிறேன்.

உங்கள் தோழன்,
பகத்சிங்.

1 பின்னூட்டங்கள்:

MANO நாஞ்சில் மனோ said...

பகத்சிங் மாவீரன் மட்டுமில்லை, மானம் கொண்ட வீரனும் கூட....!!!