> குருத்து: 2018

December 4, 2018

தற்கொலைகளும் வங்கிகள் மீதான நம்பிக்கையின்மையும்!


ஒவ்வொரு வருடமும் தீபாவளி நெருங்கும் வேளையில் பத்திரிகைகளில் சில தற்கொலைகள் கண்ணில் படுகின்றன.

இரண்டு நாட்களுக்கு முன்பு கொரட்டூர் பகுதியில் அம்மாவும் மகனும் ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் பணத்தை வாங்கி, பங்குச்சந்தையில் முதலீடு செய்ததில் 15 லட்சம் வரை நஷ்டமடைந்து விட்டது என இருவரும் தூக்கிலிட்டு இறந்துவிட்டனர். தான் வளர்த்த நாயை கவனிக்க ஆள் இல்லாததால் விசம் வைத்தும் கொன்று விட்டனர்.

இன்று மதுராந்தகம் பகுதியில் சில கோடிகளை வசூல் செய்து தலைமறைவாகிவிட்டனர்.

கடந்தாண்டு மதுரை மாவட்டம் வண்டியூரில் ஏலச்சீட்டு நடத்தி பணத்தை திரும்பக் கொடுக்க முடியாமல் குடும்பத்தில் உள்ள எட்டு பேரும் தற்கொலைக்கு முயன்றதில், வீட்டிலேயே 6 பேர் வரை இறந்துவிட்டனர்.

மக்கள் தங்களுடைய பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக சிறுக, சிறுக சேமிப்பதற்காக பண்டு, ஏலச்சீட்டு என தாங்கள் வசிக்கும் பகுதிகளில் தனி நபர்களை நம்பி பணத்தை கட்டுகின்றனர்.

பணத்தை வாங்கிய அந்த நபர்கள் தெரிந்த சிறுவியாபாரிகளுக்கு, தொழிலாளிகளுக்கு, சிறு தொழில் செய்பவர்களுக்கு பணத்தின் அளவுக்கு தகுந்த மாதிரி இரண்டு சதவிகித வட்டி, மூணு வட்டி, கந்து வட்டி என்ற அளவில் கடன் தருகிறார்கள். அந்தப் பணம் சரியாக திரும்ப வரும் வரைக்கும் பிரச்சினையில்லை. வாங்குகின்ற நபர்கள் இறந்துவிட்டாலோ, ஊரை விட்டு ஓடிவிட்டாலோ, நொடித்துப் போய் விட்டாலோ, தனது ஊதாரித்தனத்தாலோ நெருக்கடியில் சிக்கிவிடுகின்றனர்.

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு அமல்ராஜ் (50) தான் நடத்தும் ஏலச்சீட்டில் ஆட்டோ ஓட்டுனரை சேர்க்கிறார்.

சில மாதங்கள் பணத்தை கட்டுகிறார். ஏலச்சீட்டு பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்தில் எடுக்கிறார். அதற்குப் பிறகு தான் கட்டவேண்டிய பணத்தை கட்ட மறுக்கிறார். போலீசிடம் பஞ்சாயத்து போகிறது. சமரசம் பண்ணி விடுகிறார்கள். அதற்குப் பிறகும் பணத்தை தர மறுக்கிறார்.

அமல்ராஜ் பெட்ரோலை வாங்கி கொண்டு போய் சண்டையிடுகிறார். சண்டையின் முடிவில் பணத்தை கொடுத்தவரும் இறந்துவிடுகிறார். பணத்தை வாங்கியவரும் இறந்துவிடுகிறார். கூடுதலாக பணத்தை வாங்கிய அவருடைய துணைவியாரையும் நெருப்பு பற்றி விடுகிறது.
இப்படி பல ஆண்டுகளாக பல பகுதிகளில் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இதை எப்படி தவிர்க்கலாம்? பெரும்பாலான மக்களுக்கு வங்கி நடவடிக்கைகள் அன்னியமாகத் தான் இருக்கிறது. படிப்பறிவு இல்லாத பெரும்பாலான மக்களுக்கு ஏடிஎம்-ல் பணம் எடுப்பதே மலைப்பாக தான் இருக்கிறது.

கிராமப் பகுதிகளில் வங்கிகளின் தூரம் அதிகம். மேலும் வங்கி தரும் வட்டி விகிதம் குறைவானது என்பதும் ஒரு காரணம்.

சமீபத்தில் உறவினர் ஒருவர் புதிதாக வீடு வாங்கினார். எப்படி இத்தனை லட்சம் என விசாரித்தால்... நெருங்கிய உறவினர்கள் பலரும் நடுத்தரவர்க்க பிரிவினர்கள். வங்கியில் நிரந்தர வைப்பு (Fixed Deposit) வைத்திருந்தார்கள்.

மோடி அரசு நிரந்தர வைப்புகளை எடுக்கவிடாமல் செய்யப்போகிறது என்ற பேச்சு அடிபட்டது. உடனே நிரந்தர வைப்புகளை எடுத்து நெருங்கிய உறவினருக்கு கடனாக கொடுத்து விட்டனர்.

அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளை போலவே எல்லாவற்றுக்கும் சேவை கட்டணத்தை அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். சேவைத்துறை என்ற கண்ணோட்டத்திலிருந்து, வருவாய் ஈட்டும் துறையாக மாறி பலகாலமாகிவிட்டது! எஸ்.பி.ஐ வங்கி சில மாதங்களுக்கு முன்பு சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 5000 இருக்கவேண்டும் என அறிவித்தது. கிராம பகுதிகளுக்கு ரூ. 3000 என அறிவித்தது. இதையே காரணம் காட்டி என்னுடைய சேமிப்பு கணக்கை ரத்து செய்ய விண்ணப்பித்தேன். அதற்கான கட்டணம் ரூ. 625 என்றார்கள். பொதுத்துறை வங்கிகளை ஒழித்துக் கட்டுவதற்காக தான் வேலை செய்கிறீர்களா என வங்கி மேலாளரிடம் சண்டையிட்டேன்.

வங்கியில் தகராறு செய்தால் பிற்காலத்தில் வீட்டுக் கடன் தனிநபர் கடன் வாங்க முடியாது என பல நடுத்தர வர்க்கத்தினர் எவ்வளவு கட்டணம் என்றாலும், அமைதியாக கட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள். நீங்கள் தான் சண்டை போடுகிறீர்கள் என்றார் மேலாளர். இறுதியில் வங்கி கணக்கை ரத்து செய்யாமலே மொத்தப் பணத்தையும் தந்தார்கள்.

வங்கிகள் பெருமுதலாளிகளுக்கு கடன்களை அள்ளித் தருகின்றன. அவர்கள் ஒன்று கட்ட மறுக்கிறார்கள். அல்லது நாட்டை விட்டு அரசு பாதுகாப்போடு ஓடிவிடுகிறார்கள். அல்லது அரசே வராக்கடனாக மாற்றிவிடுகிறது அல்லது ரத்து செய்துவிடுகிறது.

வங்கிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பொதுத்துறை வங்கிகளை இணைத்துக்கொண்டே செல்கிறார்கள்.

இப்பொழுது மோடி 59 வினாடிகளில் சிறு தொழில்களுக்கு ஒரு கோடி வரை கடன் என அறிவித்திருக்கிறார். என்ன திட்டத்தில் அறிவித்திருக்கிறார் என தெரியவில்லை. காத்திருந்து பார்க்கலாம்.

கரையெல்லாம் செண்கப்பூ - சுஜாதா

நாட்டுப்புற பாடல்களை சேகரிக்க பட்டணத்திலிருந்து நாயகன் கிராமத்திற்கு வருகிறார். ஒரு காலத்தில் ஜமீனாக இருந்த அந்த பழைய வீட்டில் இப்பொழுது தனியாளாக தங்குகிறார். வீட்டில் இரவில் சில மர்மங்கள் நடக்கின்றன. பாடல்களை ஆய்வு செய்ய வந்தவர், வீட்டையும் அவ்வப்பொழுது ஆய்வு செய்கிறார்.

இதற்கிடையில் ஜமீந்தாரின் பேத்தியும் நகரத்திலிருந்து வந்து சேர்கிறாள். அந்த வீட்டிலேயே அவளும் தங்குகிறாள். கொஞ்ச நாளில் அவள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறாள். பேய் அடித்துவிட்டது என ஊர்க்காரர்கள் சிலரும், ஊர்க்கார பெண் ஒருத்தி கொன்றுவிட்டாள் என சிலரும் பேசிக்கொள்கிறார்கள்.

கொலை செய்தது யார்? வீட்டில் நடக்கும் மர்மங்களுக்கு காரணம் யார்? என்பதை மீதி கதையில் சொல்கிறார்கள்.

*****


ஆனந்தவிகடனில் 21 வாரம் வெளிவந்து வாசகர்களிடம் பரவலாக பேசப்பட்ட தொடர் இது. சுஜாதா சொல்கிறார் “நாவல் வெளியானதும் ஒரு கிரிக்கெட் டீம் அளவிற்கு தயாரிப்பாளர்கள் வீட்டிற்கு படை எடுத்தார்கள். அதில் பாலுமகேந்திரா, பஞ்சு அருணாச்சலம் என பல பிரபலங்களும் அடக்கம்”

பிறகு மெல்ல மெல்ல சுதி குறைந்து, பிரதாப் போத்தன், ஸ்ரீபிரியா, மனோரமா என பலர் நடித்து, சி.என். இரங்கராஜன் இயக்கியிருக்கிறார். இந்த கதைக்காக ஒரு தயாரிப்பாளர் முன்பணமான ரூ. 5000 தந்துள்ளார். அவர் படம் பண்ணவில்லை என்று ஆனதும் முன்பணத்தை சின்சியராக திரும்ப வாங்கி கொண்டாராம். அதில் வங்கி செலவு ரூ. 10 ஆகியுள்ளது. எடுத்த கதைக்கு ஒத்த ரூபாய் கூட கொடுக்கவில்லை என சுஜாதாவே தனது பேட்டியில் கொஞ்சம் சூசகமாக சொல்லியிருக்கிறார். இப்படிப்பட்ட சினிமாக்காரர்கள் தான் இலவசங்களைப் பற்றி வியாக்கியனம் செய்கிறார்கள்.

சுஜாதா மட்டும் இந்த கதையை எழுதாமல், வேறு யார் எழுதியிருந்தாலும், பிரதாப்பை இறுதியில் ஆய்வாளர் இல்லை. ரகசிய போலீசு என சொல்லியிருப்பார்கள்.



படம் ஊத்திகிச்சு. ஒரு வாரம் கூட ஓடவில்லை. சில டல்லான சானல்களில் இந்த படத்தை அவ்வப்பொழுது போடுவார்கள். “ஊரெல்லாம் பிச்சிப்பூவு, கரையெல்லாம் செண்பகப்பூ”, ”ஏரியில எலந்த மரம்” இளையராஜாவின் பிரபல இரண்டு பாடல்களை நாம் கேட்டிருப்போம்.

September 25, 2018

The Post - பத்திரிக்கை சுதந்திரம்


1960-களில் அமெரிக்கா வியட்நாம் மீது ஆக்கிரமிப்பு போர் செய்து கொண்டிருந்தது. வியட்நாமிய போராளிகள் கொரில்லா போர் செய்து அமெரிக்க ராணுவத்தினரை சிதறடித்துக் கொண்டிருந்தார்கள்.

உச்சக்கட்ட போர் சமயத்தில் 60 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இறந்தும் காணாமலும் போயினர். அமெரிக்க அரசோ கெத்தாக போரில் முன்னேறி கொண்டிருப்பதாக கதை விட்டுக் கொண்டிருந்தது.

இராணுவ ஆய்வாளர் ஒருவர் உலகுக்கு உண்மையை சொல்ல நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஆதாரம் அளிக்கிறார். இதழில் வெளியானதும் நாடே கொந்தளிக்கிறது. அமெரிக்க அரசு ஆடிப்போய்விடுகிறது!

'நியூயார்க் டைம்ஸ்'க்கு போட்டி பத்திரிக்கையான 'வாஷிங்டன் போஸ்ட்' மேலும் வியட்நாமிய போர் தொடர்பான செய்திகளை தேடுகிறது. கண்டுபிடித்தும் விடுகிறது.

இதற்கிடையில் வாஷிங்டன் போஸ்ட் பொருளாதாரத்தில் தள்ளாடுகிறது. பொதுமக்களிடம் பங்குகளை வெளியிட்டு, தன்னைப் பலப்படுத்திக் கொள்ளலாம் என முடிவு செய்கிறது.

இதே சமயத்தில் நியூயார்க் டைம்ஸில் ஆதாரம் வெளியானதை ஒட்டி, அமெரிக்க அரசு சுதாரித்து மேற்கொண்டு ஆதாரங்களை வெளியிடக்கூடாது என நீதிமன்றத்தில் உத்தரவு வாங்கி விடுகிறது.

கிடைத்த ஆதாரங்களை, தடையை மீறி வெளியிட்டால், வாஷிங்டன் போஸ்ட் இதழை இழுத்து மூடவேண்டி இருக்கும். பத்திரிகை ஆசிரியரும், அதன் மேலாண் இயக்குநரும் நிச்சயமாய் கைது செய்யப்படுவார்கள்.

அதனால் பத்திரிக்கையில் வெளியிட மற்ற இயக்குனர்கள் மறுக்கிறார்கள்.

எல்லாவற்றையும் மீறி மக்களுக்கு வாஷிங்டன் போஸ்ட் உண்மையை சொன்னார்களா என்பது முழு நீளக்கதை!
****

இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கு இரண்டு முகங்கள். ஜாஸ், ஜுராசிக் பார்க் , இண்டியனா ஜோன்ஸ் என ஒரு முகம். இன்னொரு முகம் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், அமிஸ்டாட், தி போஸ்ட்.

படத்தில் பத்திரிக்கை ஆசிரியராக வரும் டாம் ஹாங்க்ஸ், முதலாளியாக வரும் மெரில் ஸ்டிரிப் என எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சிறந்த திரைப்படம், இயக்குனர், நடிகர், நடிகை, திரைக்கதை, இசை என ஆறு வகைகளில் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா உலகம் முழுவதிலும் போர் என்ற பெயரில் பல உயிர்களை கொன்று குவித்துள்ளது. வியட்நாமில் தோற்றுப் போவோம் என தெரிந்தே பல ஆயிரம் தனது சொந்த நாட்டு இளைஞர்களையே பலிகொடுத்தது.

படத்தில் ஒரு இடத்தில் சொல்லப்படும் செய்தி.

ஊடகம் ஆளப்படுகிறவர்களுக்கு தான் சேவை செய்ய வேண்டும். ஆள்பவருக்கு அல்ல!

இந்திய நிலைமைகளில் இதை யோசித்துப் பார்த்தால்... நிலைமை மிக மோசமாக இருக்கிறது. ஊடகங்கள் பச்சையாக மிரட்டப்படுகின்றன. நேர்மையான பத்திரிகையாளர்கள் வேலையில் இருந்து தூக்கி எறியப்படுகிறார்கள். மிக நெருக்கடியான கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

அவசியமான படம்! பாருங்கள்!

September 6, 2018

’கடவுள்' கொடுத்த பல்லும், சரவண ஸ்டோர் முதலாளியும்!

பத்தாண்டுகளுக்கு முன்பு இடதுப்புறம் கடைசியில் இருந்த கடவாய்ப்பல் தொந்தரவு செய்தது. ஒரு பல் மருத்துவரை பார்த்ததில், பூச்சி குடைந்தவரை சுத்தப்படுத்தி மேலே பூச்சு பூசி, பல்லைக் காப்பாற்றிக் கொடுத்தார்.

மீண்டும் கடந்த மாதம் மீண்டும் அதே பல் தொந்தரவு தந்தது. மருத்துவரைப் பார்த்ததில்... கடந்தமுறை குடைந்ததைவிட, பூச்சி இன்னும் ஆழமாய் குடைந்திருந்தது. இந்தமுறை பல்லை காப்பாற்ற முடியவில்லை. மொத்தமாய் காலி செய்து, ஒரு செயற்கைப் பல் பொருத்தவேண்டும் என மருத்துவர் சொன்னதை, சோகத்துடன் ஏற்றுக்கொண்டேன்.

தையற்காரர் அளவெடுப்பது போல, புதிய முறையில் அளவெடுத்தார். ஒரு வாரம் கழித்து சென்றேன். பல் தயாராகி எனக்காக காத்திருந்தது. விளம்பரத்தில் காட்டுவது போல அழகாய் இருந்தது.

மருத்துவர் எனக்கு பல்லைப் பொருத்துவதற்கு முன்பு, மலையாளம், ஆங்கிலம், தமிழ் கலந்து 'கடவுள்' கொடுத்த பல்லை, இழந்துவிட்டீர்கள். இந்தப்பல் செயற்கையானது. இயற்கையான பல்லை போல கிடையாது. ஆகையால், பார்த்து கவனமாய் கடியுங்கள்' என்றார். அவர் சொன்னதும் தான் இழந்த பல்லுக்காக நிறைய வருந்தி, புதுப்பல்லுடன் வீடு வந்து சேர்ந்தேன்.

இன்று திநகர் வழியாக வந்த பொழுது, சரவண ஸ்டோர் கடை வாசலில், வாடிக்கையாளர்களை வரவேற்கும் விதமாக, கடை முதலாளி கைகூப்பி பேனரில் நின்றிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டோ, மூன்றோ பற்கள் முன்பக்கம் எத்தி நின்று, நம்மூர் அண்ணாச்சியாய் நன்றாக இருந்தார்.

மீம்ஸ்கள் போட்டு கலாய்த்தார்கள் என்பதற்காகவா, பிரபல நடிகைகளோடு விளம்பரத்தில் நடிப்பதற்காகவா என தெரியவில்லை. எத்திக்கொண்டு இருந்த பற்களை தட்டி, சரி செய்து, இப்பொழுது செயற்கை பற்களுடன் வலம் வருகிறார்.

ஒரு 'Legend' அல்லது ஒரு 'Legend' கடையின் சொந்தக்காரர் சொந்த பற்களை இழக்கும் பொழுது, 'சொல்லாமலே' நாயகன் போல எவ்வளவு அழுதிருப்பார். எத்தனை கோடிகள் வைத்திருந்தும், இழந்த சொந்த பற்களை வாங்க முடியுமா?

தூறல் நின்னுப் போச்சு! (1982) – சில குறிப்புகள்

இன்று மதியம் கே தொலைக்காட்சியில் பார்த்தேன். எப்பொழுதும் எந்த காட்சி பார்த்தாலும், படத்தின் இறுதிவரை நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும் வசீகரம் கொண்டது! பாக்யராஜின் முதன்மையான படங்களில் இது முக்கியமான படம்.

2563 இருக்கைககள் கொண்ட ஆசியாவின் பிரமாண்டமான முதல் திரையரங்கான மதுரை தங்கம் திரையரங்கில் உலகம் சுற்றும் வாலிபனுக்கு பிறகு அரங்கு நிறைந்த காட்சிகளாக நூறு நாட்கள் ஓடிய படம்!

படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, தெலுங்கிலும், இந்தியிலும் கூட எடுத்தார்கள். அந்தந்த மொழி, கலாச்சாரத்திற்கு ஏற்ப சின்ன சின்ன மாற்றங்கள் செய்திருக்கிறார்கள். என்னென்ன என்று கவனித்தால் சுவாரசியமாக இருக்கிறது. தெலுங்கில் விஜயசாந்தி நடித்திருக்கிறார். இந்தியில் அனில் கபூர் நடித்திருக்கிறார். தமிழில் நாயகியின் அப்பா சாகிறார் அல்லவா! தெலுங்கில் நாயகியை அரளி விதையை சாப்பிட வைத்து, பிழைக்க வைத்திருக்கிறார்கள். இந்தியில் நம்பியார் பாத்திரத்தில் 'சோலே' அம்ஜத்கான், கத்திக் குத்தை வாங்கிகொள்கிறார். 
இந்த படத்தின் பாதிப்பில் இன்றைக்கு வரைக்கும் படம் எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அப்பாஸ் – சிம்ரன் நடித்த “பூச்சூடவா” படத்தை உற்றுப் பாருங்கள். தூ. நி. போச்சு படம் தான் என பளிச்சென தெரியும். செந்தாமரை கதாபாத்திரத்தை கிரிஷ் கார்னட் செய்திருப்பார். இப்பொழுது சசிக்குமார் மீண்டும் எடுக்கப்போவதாக சொல்கிறார்கள்.

செந்தாமரையும், நம்பியாரும் அருமையாக செய்திருப்பார்கள். செந்திலுக்கு இந்தப்படம் தான் திருப்புமுனை என்கிறார்கள்.

ஏற்பாடு திருமணத்தில் வரதட்சணை பேசுவது ஒரு வியாபாரம் பேசுவது போல மிக கறாராக பேசுவார்கள். இந்த படத்தில் அதை சரியாக காட்டியிருப்பார்கள். படத்தில் இறுதியில் ஆணாதிக்கத்தை நன்றாகவே சாடியிருப்பார்கள். அதையெல்லாம் கேட்டு திருந்துவார்களா என்பது தான் எனக்கு ஆச்சர்யம்.

ஆறெல்லாம் வறண்டு, ஆற்று மணலை எல்லாம் அரசே முன்நின்று சூறையாடிய வேளையில், ஆற்றுக்கு தண்ணீர் எடுக்க போவது போல இப்பொழுது காட்சி வைக்க முடியுமா?

படத்தின் பலத்தில் இளையராஜாவும் ஒருவர். எல்லா பாடல்களும் இனிமையானவை. பின்ணனி இசையும் அசத்தியிருப்பார்.

படத்தலைப்புகளை ரெம்பவும் பாந்தமாக, மங்களகரமாக பெயரிடுவார்கள். ”தூறல் நின்னுப் போச்சு” என நெகட்டிவாக தைரியமாகவே வைத்திருக்கிறார் பாக்யராஜ்!

August 30, 2018

1084ன் அம்மா - வங்க நாவல், இந்திப்படம், தமிழ் நாடகம்

1084ன் அம்மா (1997) - வங்க நாவல், இந்திப்படம், தமிழ் நாடகம்

1970களில் நக்சல்பாரி (Naxalbadi) எழுச்சி நாடு முழுவதும் சமூக மாற்றத்தை விரும்பிய இளைஞர்களை ஈர்த்தது. போராட்டங்கள் நாடு முழுவதும் வெடித்தது. ஆளும் மத்திய, மாநில அரசுகள் நக்சல் இளைஞர்களை வேட்டையாட துவங்கியது. வங்கத்தின் தெருக்களில் துரத்தி, துரத்தி சுட்டுக் கொல்லப்பட்ட, அடித்தே கொல்லப்பட்ட பலநூறு இளைஞர்களில் ஒருவர் தான் பிரதி (Brati).

பிரதியின் குடும்பம் மேட்டுக்குடி குடும்பம். நக்சல் இயக்கத்தில் இணைந்து போராடியது அவர்களுடைய ’தகுதிக்கு’ இழுக்காக படுகிறது. ஆகையால் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பிரதியினுடைய தடயங்களை அரசாங்க ஏடுகளில் இருந்து முற்றிலுமாய் அழித்துவிடுகின்றனர்.

தனது பிரியத்துக்குரிய மகனின் தடயங்களை தேடிச் செல்கிறார் அம்மா. அதன் வழியே தன் மகனின் கனவுகளை, லட்சியங்களை காணுகிறார். உலகம் இரண்டாக இருப்பது முகத்தில் அறைகிறது.
****

இந்த நாவலை எழுதியவர் மகாசுவேதா தேவி. வங்கத்தைச் சேர்ந்தவர். சமூக செயற்பட்டாளர். சமீபத்தில் தான் இறந்தார். இந்த நாவல் தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு என இந்தியாவின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவலை என் நண்பர் ஒருவர் பரிசளித்தார்.

இந்தியில் முக்கியமான இயக்குநரான இயக்குநர் கோவிந்த் நிஹாலனி இயக்கி #Hazaar_Chaurasi_Ki_Maa என்ற பெயரில் 1997ல் வெளியே வந்தது. ஜெயா பச்சன் 18 வருட இடைவெளிக்கு பிறகு பிரதான கதாபாத்திரத்தில் நடித்தார். பிரதியின் காதலியாக நந்திதாதாஸ் நடித்தார். படம் தேசிய விருது வென்றது. இப்பொழுதும் யூடியூப் தளத்தில் கிடைக்கிறது.

கடந்த சனி, ஞாயிறு இரண்டு நாள்களில் சென்னையில் இந்த நாவலை நாடகமாக ஒரு குழு மேடையேற்றினார்கள். 1 மணி நேரம் 20 நிமிடம். ஒரு நாவல் படித்து பத்து ஆண்டுகள் ஆனபின்பும், சில காட்சிகள் மனதில் நிரந்தரமாக தங்கிவிடும் அல்லவா! அப்படிப்பட்ட சில காட்சிகளை அழுத்தம் திருத்தமாக நாடகத்தில் கொண்டு வந்திருந்தார்கள். பிரதான கதாபாத்திரமான அம்மா பாத்திரத்தில் நாடகத்துறை சார்ந்த மங்கை அருமையாக நடித்திருந்தார்.

போலீசாக நடித்தவரும், காதலியாக நடித்தவரும் பாத்திரத்தில் பொருந்தியிருந்தார்கள்.செப்டம்பர் மாதம் சென்னையில் மீண்டும் போடுவதாக அறிவித்தார்கள். வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக பாருங்கள்!
***

மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்தால், தேசிய பாதுகாப்பு சட்டம், தடுப்பு காவல் சட்டத்தை போட்டு, அரசு சிறையில் தள்ளுகிறது. மீண்டும் மீண்டும் போராடினால் போலி மோதல் கொலைகள் என இப்பொழுதும் இந்த நாவலில் எழுப்பப்படுகிற கேள்விகள் சமூக நிலைமைக்கு பொருந்தி போகிறது. சமூகத்தில் அநீதிகள் நீடிக்கும் வரை பிரதிகள் உருவாகிக்கொண்டே தான் இருப்பார்கள். இருக்கிறார்கள். அதனால், இன்றைக்கும் நக்சல்கள் என்றால்...ஆளும் வர்க்கங்கள் குலைநடுங்கி போகின்றன.

”மரம் அமைதியை விரும்பினாலும் காற்று விடுவதில்லை!” 

லைலாவின் அழகை காண மஜ்னுவின் கண்கள் வேண்டும்

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்” படத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. நாயகனுக்கு பின்தலையில் அடிப்பட்டு, ஆழ்மனதில் (!) இருந்த காதலி கூட மறந்து போய், (ஆனால் எட்டாம் வகுப்பில் படிக்கும் பொழுது காதலித்த சாயீரா பானு நினைவில் நிற்பாள்) திருமண வரவேற்பில் தன் அருகில் நிற்கும் நாயகியை ப்பா! யார்டா இந்த பொண்ணு? பேய்மாதிரி இருக்கு!” என சொல்லும் பொழுது, நாயகி முதலில் வருத்தம் கொள்வாள். இரண்டாவதுமுறை, மூன்றாவது முறை சொல்லும் பொழுது, மெலிதாய் கண்கசிவாள். காதல் திருமணம். திருமணத்தில் உடன்பாடு இல்லாத அம்மாவும், அப்பாவும் பிரச்சனை செய்துவிடக்கூடாதே என்பதற்காக, பீறிட்டு வரும் அழுகையை கவனமாய் மறைத்துக்கொள்வாள்.

பல்வேறு களேபரங்களுடன் வரவேற்பு முடிந்து, அடுத்த நாள் திருமணமும் முடிந்து… மருத்துவமனைக்கு அழைத்து சென்று, இரவெல்லாம் தூங்கி எழுந்த பிறகு, மறந்த எல்லா நினைவுகளும் மீண்டும் வந்துவிடும். வரவேற்பு, திருமணம் முடிந்ததே அவனுக்கு நினைவுக்கு வராது. நிம்மதி பெருமூச்சுடன், நண்பர்கள் நடந்த அனைத்தையும் விளக்குவார்கள்.

பிறகு வீடு திரும்பும் வழியில், நண்பனின் அந்த சாதாரண செல்பேசியில் உள்ள புகைப்படங்களை பார்த்துக்கொண்டே வருவான். திருமண வரவேற்பில் நிற்கும் நாயகியைப் பார்த்து “இந்த போட்டோல தனம் ரெம்ப அழகா இருக்கில்லா!” என்பான் கண்களில் காதலுடன்!. புன்னகைத்துக்கொண்டே வண்டியை ஓட்டிச்செல்வான் நண்பன்.
எனக்கு நினைவுக்கு வந்தது இந்த வார்த்தைகள் தான்!

"லைலாவின் அழகை காண மஜ்னுவின் கண்கள் வேண்டும்”

August 17, 2018

பூங்கா - சில குறிப்புக்கள்!


பூங்காவிற்கும் எனக்கும் நெருங்கிய பந்தம் உண்டு.
வீடு ஒரு பூதம் போல! நமக்கு ஏதாவது வேலைகள் கொடுத்துக்கொண்டே
இருக்கின்றன.
வீட்டில் படிப்பதற்கான எல்லா போராட்டங்களும் தோற்றுவிட்ட பிறகு, நம்மை அரவணைப்பது பூங்காக்கள் தான்! நண்பர்களுக்கும் பலமுறை பரிந்துரைத்திருக்கிறேன்.
 
அமைதியும் மரங்கள் தருகிற குளிர்ச்சியும் படிப்பதற்கு இதமான சூழல் தருபவை!
 சில ஆண்டுகளுக்கு முன்புவரை பூங்காக்களின் நிலை படுமோசம். அந்தந்த பகுதி மக்களின் முயற்சியா, ஏதும் உலக வங்கித்திட்டமா என தெரியவில்லை. கடந்த சில வருடங்களாக பூங்காக்கள் சென்னையில் ஆங்காங்கே உருவாக்கப்படுகின்றன. குறைந்தபட்ச அளவில் பராமரிக்கப்படுகின்றன.
 மற்றப்படி, பூங்காக்களில் படிக்கும் பொழுது போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறவர்கள், நண்பர்கள், காதலர்கள் முக்கியமாக குழந்தைகள்.
சென்னையில் முழுநேர பூங்காக்கள் மிக குறைவு தான்! மற்றப்படி, பூங்காக்கள் விடிகாலையிலேயே விழித்துக்கொள்கின்றன. காலை 10.30 வரை இயங்குகின்றன. மீண்டும் மாலை 4 மணிக்கே திறந்துகொள்கின்றன. இரவு 8.30 -க்கு பாதுகாவலர் விசில் ஊதி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்.
 "ரசியாவில் எங்கெங்கு காணினும் பூங்காக்களுக்கு நடுவே வீடுகள் இருக்கின்றன" என்பார் வைரமுத்து வடுகப்பட்டி முதல் வால்காவரை' புத்தகத்தில்!
நினைத்துப் பார்த்தாலே சந்தோசமாக இருக்கிறது! அதற்கு சமூக மாற்றமல்லவா செய்யவேண்டியிருக்கும்! :)
 எதுவும் போராட்டம் இல்லாமல் எளிதில் கிடைத்துவிடுவதில்லை

வீட்டில் படிப்பதற்கான எல்லா போராட்டங்களும் தோற்றுவிட்ட பிறகு, நம்மை அரவணைப்பது பூங்காக்கள் தான்! நண்பர்களுக்கும் பலமுறை பரிந்துரைத்திருக்கிறேன்.அமைதியும் மரங்கள் தருகிற குளிர்ச்சியும் படிப்பதற்கு இதமான சூழல் தருபவை!சில ஆண்டுகளுக்கு முன்புவரை பூங்காக்களின் நிலை படுமோசம். அந்தந்த பகுதி மக்களின் முயற்சியா, ஏதும் உலக வங்கித்திட்டமா என தெரியவில்லை. கடந்த சில வருடங்களாக பூங்காக்கள் சென்னையில் ஆங்காங்கே உருவாக்கப்படுகின்றன. குறைந்தபட்ச அளவில் பராமரிக்கப்படுகின்றன.மற்றப்படி, பூங்காக்களில் படிக்கும் பொழுது போரடிக்காமல் பார்த்துக்கொள்கிறவர்கள், நண்பர்கள், காதலர்கள் முக்கியமாக குழந்தைகள்.சென்னையில் முழுநேர பூங்காக்கள் மிக குறைவு தான்! மற்றப்படி, பூங்காக்கள் விடிகாலையிலேயே விழித்துக்கொள்கின்றன. காலை 10.30 வரை இயங்குகின்றன. மீண்டும் மாலை 4 மணிக்கே திறந்துகொள்கின்றன. இரவு 8.30 -க்கு பாதுகாவலர் விசில் ஊதி எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்."ரசியாவில் எங்கெங்கு காணினும் பூங்காக்களுக்கு நடுவே வீடுகள் இருக்கின்றன" என்பார் வைரமுத்து வடுகப்பட்டி முதல் வால்காவரை' புத்தகத்தில்!நினைத்துப் பார்த்தாலே சந்தோசமாக இருக்கிறது! அதற்கு சமூக மாற்றமல்லவா செய்யவேண்டியிருக்கும்! https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/f4c/1/16/1f642.pngஎதுவும் போராட்டம் இல்லாமல் எளிதில் கிடைத